மு.க.ஸ்டாலினிடம் ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கினார்  நடிகர் வடிவேலு 

by Editor / 14-07-2021 03:55:34pm
மு.க.ஸ்டாலினிடம் ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கினார்  நடிகர் வடிவேலு 

 


முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  நடிகர் வடிவேலு சந்தித்து கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.5 லட்சம் வழங்கினார்.
அதன்பின் நடிகர் வடிவேலு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். அப்போது கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சத்தை முதலமைச்சரிடம் வழங்கினேன். என்னிடம் அவர் மிகவும் எளிமையாக நடந்து கொண்டார். மேலும் என்னை அவரது குடும்பத்தில் ஒருவனாகப் பார்த்தார்.
தற்போது திரைத்துறையில் தொழில்நுட்பம் நிறைய வளர்ச்சியடைந்துள்ளது. ஓடிடியில் நான் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. தொழில்நுட்பம் வளர வளர நாமும் அதற்கேற்றவாறு மாறிக் கொள்ள வேண்டும். இனி வரும் காலங்களில் நிறைய திரைப்படங்களில் நடிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முதலமைச்சர் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். முதலமைச்சராகப் பதவியேற்ற ஒரு மாதத்திலேயே கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார். இவரது செயல்பாடுகள் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. இதனை முதலமைச்சரின் அப்பா கருணாநிதி பார்த்திருந்தால் மிகவும் சந்தோசப்பட்டிருப்பார்.
மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். அரசுக்கு ஒத்துழைப்பு தாருங்கள் என்று முதலமைச்சர் மக்களிடம் கெஞ்சிக் கேட்கிறார். அனைத்து மக்களும் நலத்துடன் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இதன்மூலம் மக்களை அவர் தன்வசப்படுத்தி நல்லது செய்கிறார். யாருடைய மனதையும் புண்படுத்தாமல் முதலமைச்சர் பேசுகிறார். இதைப் பார்க்கும் போது எனக்கு நெகிழ்ச்சியாக உள்ளது.
அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், மாதந்தோறும் குடும்பத் தலைவிக்கு ஊதியத் தொகை வழங்குதல் போன்ற திட்டங்களால் பெண்கள் பயன்பெறுவார்கள். பெண்களின் மத்தியில் இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நான் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோசையும் செலுத்திவிட்டேன். இன்னும் 40 ஊசி போட வேண்டும் என்றாலும் கூட நான் போட்டுக் கொள்வேன். தற்போது மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு நலத்துடன் வாழ வேண்டும் என்பதே எனது அன்பான வேண்டுகோள் ஆகும்.நன்றாக இருக்கும் தமிழ்நாட்டில் இருந்து கொங்கு நாட்டை ஏன் பிரிக்க வேண்டும்? அப்படி பிரிக்கவும் முடியாது. நான் அரசியல் பேசவில்லை.இவ்வாறு நடிகர் வடிவேலு தெரிவித்தார்.

 

Tags :

Share via