100-வது வயதில் சங்கரய்யா; தமிழகத்தின் சொத்து;: முதல்வர் வாழ்த்து

by Editor / 15-07-2021 09:48:58am
100-வது வயதில் சங்கரய்யா; தமிழகத்தின் சொத்து;: முதல்வர்  வாழ்த்து

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா இன்று (ஜூலை 15) தன் 100-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். தொழிலாளர் நலன் சார்ந்த பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர் சங்கரய்யா. இவருடைய 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த தலைவர்களும் கடந்த சில தினங்களாகவே வாழ்த்துகளைக் கூறிவருகின்றனர். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 15) வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

"பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தோழரும் தமிழக அரசியலில் மூத்த தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்கக் கால உறுப்பினருமான மதிப்புக்குரிய என்.சங்கரய்யா, 100-வது அகவை காணும் சிறப்பு மிக்க நாள் இன்று (ஜூலை 15).

தமிழக அரசியல் தலைவர்களில் 100 வயதைத் தொட்டு, பொதுவாழ்வில் உள்ள அனைவருக்கும் வழிகாட்டும் தியாக வாழ்வுக்குச் சொந்தக்காரராகத் திகழ்கிறார் சங்கரய்யா. சுதந்திரப் போராட்ட வீரராக, இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டக் களம் கண்டவராக, மாணவர்கள் அமைப்பைக் கட்டமைத்தவராக, பொதுவுடைமை இயக்கத்தின் போராளியாக, ஜனசக்தி, தீக்கதிர் ஏடுகளில் பொறுப்பு வகித்த பத்திரிகையாளராக, மக்கள் உரிமைக்காக சங்கநாதம் எழுப்பிய சட்டப்பேரவை உறுப்பினராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுச் செயலாளராக சங்கரய்யாவின் பொதுவாழ்க்கை பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது.

8 ஆண்டுகள் சிறைவாசம், 3 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை என, இன்னல்களை இன்முகத்துடன் எதிர்கொண்டு, தியாகத்தின் அடையாளமாக விளங்கும் பொதுவுடைமை இயக்கத் தலைவர் சங்கரய்யா, திராவிட இயக்கத்துடன் மக்கள் நலன் சார்ந்து இணைந்து நின்றவர். தேர்தல் அரசியலில் திமுகவுடன் உடன்பட்டும் முரண்பட்டும் இருந்தாலும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெருமதிப்புக்குரிய தலைவராவார்.

சாதி ஒடுக்குமுறை எதிர்ப்பு, தீண்டாமை ஒழிப்பு, மதநல்லிணக்க முனைப்பு இவற்றுக்காகத் தலைவர் கருணாநிதியின் தலைமையிலான அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு உற்ற துணையாக அவர் நின்றதை மறக்க முடியாது. பொதுவுடைமை இயக்கக் கொள்கைகளில் உறுதிமிக்க சங்கரய்யா, ஒட்டுமொத்தத் தமிழகத்துக்கும் சொத்தாகத் திகழ்கிறார்.

வாழும் வரலாறாக நூறாவது பிறந்த நாள் காணும் சங்கரய்யா, மேலும் பல்லாண்டுகள் நலமுடன் வாழ்ந்து என்னைப் போன்றவர்களுக்கு பொதுவாழ்க்கைப் பயணத்தில் வழிகாட்டிட வேண்டும் என்ற அன்புடனும் ஆவலுடனும் நேரில் வந்து வாழ்த்தி, வாழ்த்துகளைப் பெற்றுக் கொள்கிறேன். மதிப்புக்குரிய மூத்த தோழர் சங்கரய்யாவின் தியாகத்தையும் எளிமையையும் போற்றுகிறேன்.

முதல்வர் என்ற முறையில் தமிழக மக்களின் சார்பில் நூற்றாண்டு வாழ்த்துகளை அவருக்கு வழங்கி மகிழ்கிறேன்".

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories