200 பேருக்கு கரோனா நெகடிவ் போலிச்சான்றிதழ்: தேனியில் 4 பேர் கைது

by Admin / 24-07-2021 09:28:32pm
200 பேருக்கு கரோனா நெகடிவ் போலிச்சான்றிதழ்: தேனியில் 4 பேர் கைது



தேனியில் போலியான கரோனா நெகடிவ் சான்றிதழ்கள் வழங்கியதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரோனா இரண்டாம் அலை தொற்றை தடுக்க அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. தமிழக-கேரளம் எல்லைப்பகுதியான தேனிமாவட்டத்திலிருந்து கேரளப்பகுதிக்குச் செல்ல கரோனா தொற்றை கண்டுபிடிக்கும் ஆர்.டி.பி.சி.ஆர் (ரிசர்வ் டிரான்ஸ்கிரிப்ஷன் பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன்) சோதனையில் "நெகடிவ்" என்று இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

எல்லைப்பகுதியில் கேரள போலீசார் இந்த நெகடிவ் சான்றிதழை தமிழக அரசின் வெப்சைட்டில் சரிபார்த்து அனுமதிக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் கம்பம்மெட்டு வழியாக கேரளம் சென்ற இருவரை கேரள போலீசார் சோதனை செய்தபோது அவர்கள் கொண்டுவந்த கரோனா நெகடிவ் சான்றிதழ் போலியானது என தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் உத்தமபாளையத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், முருகன் மற்றும் சான்றிதழ் தயாரித்து கொடுத்த கம்ப்யூட்டர் சென்டர் வைத்திருந்த இளைஞர் விஜயகுமார், பண்ணைப்புரம் வேல்முருகன் என 4 பேர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கம்யூட்டர்களையும், 2 செல்லிடப்பேசிகளையும் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்த கம்யூட்டர்களை சோதனை செய்ததிலும், கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய சோதனையிலும் சுமார் 200 பேர்களுக்கு இதுவரை "கரோனா நெகடிவ்" போலிச் சான்றிதழ்கள், தயாரித்து கொடுத்துள்ளதும், அதன் மூலம் அவர்கள் கேரளத்துக்குள் சென்றுள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து கம்பம்மெட்டு போலீசாரும், இடுக்கி மாவட்ட தனிப்பிரிவு போலீசாரும் போலிச்சான்றிதழ் மூலம் கேரளத்துக்குள் சென்றவர்களை முகவரியை வைத்தும், சோதனைச்சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானதை வைத்தும் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் தமிழக-கேரள எல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via