நெற்பயிரை தாக்கும் குருத்துப்பூச்சி கட்டுப்படுத்துவது எப்படி? வேளாண் பேராசிரியர்கள் விளக்கம்

by Admin / 26-07-2021 03:06:25pm
நெற்பயிரை தாக்கும் குருத்துப்பூச்சி கட்டுப்படுத்துவது எப்படி? வேளாண் பேராசிரியர்கள் விளக்கம்



 நெற்பயிரில் குருத்துப்பூச்சி தாக்குதல் தொடர்பாக நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியன் மற்றும் பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நெற்பயிரில் குருத்துப் பூச்சியின் தாக்குதல் ஆங்காங்கே தென்படுகிறது. குருத்துப் பூச்சியின் தாக்குதல் நெற்பயிருக்கு 5 முதல் 10 சதவீதம் மகசூல் இழப்பை உண்டு பண்ணுகிறது. மேலும் இதன் தாக்குதல் அதிகமாகும் பட்சத்தில் 50 முதல் 60 சதவீதம் வரை மகசூல் பாதிப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.
சாதகமான சூழ்நிலை காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருப்பது. குறைந்த வெப்பநிலை அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரை அதிகமாக தென்படும். அறிகுறிகள்: முட்டையில் இருந்து வெளிப்படும் இளம் புழுக்கள் இலைகளின் நுழைந்து 2 அல்லது 3 நாட்கள் உண்டுவிட்டு பிறகு கழுத்துப் பகுதிக்கு அருகில் சென்று தண்டில் துளையிட்டு உள்ளே சென்றுவிடும். குருத்துப் பூச்சியின் தாக்குதல் பயிரின் வளர்ச்சி பருவத்தில் அதாவது தூர்கட்டும் பருவத்தில் தாக்கும்போது வளர்ந்துவரும் தண்டுகளை உண்பதால் நடுக்குருத்து காய்ந்துவிடும். மேலும் இதனை இழுத்து பார்த்தால் மிக எளிதாக கையோடு வந்துவிடும். எனவே இந்த அறிகுறிகளை நடுக்குருத்து காய்தல் என்கிறோம்.

வளர்ந்த பயிரில் தாக்குதல் ஏற்படும் பட்சத்தில் அதாவது பால் பிடிக்கும் தருணத்தில் இந்த பூச்சி தாக்கும்போது நெற்பயிருக்கு செல்லும் உணவு தடைபட்டு விடும். ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகள்: ஆழமான கோடை உழவு செய்ய வேண்டும். அறுவடை செய்யும்போது நெல் தாள்களை தரை பரப்பினை ஒட்டி அறுவடை செய்தல் வேண்டும். நெல் நடவு செய்யும்போது முட்டைக் குவியல்கள் உள்ள இலைகளின் நுனியை கிள்ளி விட்டு நடவு செய்ய வேண்டும்.

பாக்டீரியா இலைக் கருகல் நோய் தென்பட்டால் அந்த தருணத்தில் நுனியை கிள்ளக் கூடாது. ஒரு ஏக்கருக்கு 20-25 பறவை குடில்கள் அமைக்க வேண்டும். சூரிய வெளிச்சத்தில் இயங்கக்கூடிய தானியங்கி விளக்குப் பொறியை வைத்து அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். இனக்கவர்ச்சிப் பொறிகளின் குப்பிகளை அவ்வப்போது மாற்றி அதன் தாக்குதலை குறைக்கலாம். டிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம் என்ற முட்டை ஒட்டுண்ணிகளை ஒரு ஏக்கருக்கு 2 சிசி என்ற அளவில் நடவு நட்ட 30 மற்றும் 37 வது நாள் வெளியிட வேண்டும். கார்ட்டாப் ஹைட்ரோகுளோரைடு 50% எஸ்.பி. 1000 கிராம் அல்லது ஃப்ளூபெண்டியாமைடு 39.35 % எஸ்.சி. 50 கிராம் அல்லது குளோர்பைரிபோஸ் 20% இசி 1,250 மில்லி பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம் என்றனர்.

 

 

Tags :

Share via