கோவில்கொடை நடத்துவதில்  இருதரப்புக்குமிடையே மோதல்.தீவைப்பு.

by Editor / 02-05-2024 10:31:37pm
கோவில்கொடை நடத்துவதில்  இருதரப்புக்குமிடையே மோதல்.தீவைப்பு.

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள தீவட்டிப்பட்டி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் மாரியம்மன் கோவில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த திருவிழாவை ஒரு தரப்பினர் மட்டுமே எடுத்து நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்களை மாரியம்மன் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை என புகார் எழுந்தது. இந்த ஆண்டு நாங்களும் கோவில் திருவிழாவை எடுத்து நடத்துவோம் என பட்டியலின மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் இன்று மதியம் இரண்டு தரப்பினர் இடையே வட்டாட்சியர் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் இரண்டு தரப்பினர் இடையே அதிகாரிகள் முன்னிலையிலேயே மோதல் ஏற்பட்டுள்ளது. இரண்டு தரப்பினரும் அதிகாரிகள் முன்னிலையில் கற்களை கொண்டு தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த மோதல் முற்றிய நிலையில் சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேக்கரி, டீக்கடை என 15 கடைகளை  இரண்டு தரப்பினரும் கற்களை வீசி தாக்குதலில் ஈடுப்பட்டனர்,மேலும் கும்பல்களுக்கிடையேயும் மோதலில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த ஒரு கடைக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது. கற்களை வீசியவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் தீவட்டிப்பட்டி பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். 

 

Tags : கோவில்கொடை நடத்துவதில்  இருதரப்புக்குமிடையே மோதல்.தீவைப்பு.

Share via