பிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு 

by Editor / 27-07-2021 06:57:10pm
  பிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு 

யாஸ் புயல் மற்றும் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமருடனான ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புயல் சேதம் குறித்த அறிக்கையை மட்டும் அளித்துவிட்டு புறப்பட்டுச் சென்ற விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


இதற்கு பதிலடியாக மேற்குவங்க தலைமைச் செயலாளரை டெல்லிக்கு அழைத்து பதிலடி கொடுத்தது மத்திய அரசு. ஆனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்து மேற்குவங்க முதல்வரின் ஆலோசகராக பணியமர்த்தப்பட்டார். இதனால் மத்திய அரசுக்கும், மம்தா பானர்ஜிக்கும் இடையே பனிப்போர் நீடித்து வருகிறது.இந்தநிலையில் மம்தா பானர்ஜி 3 நாள் பயணமாக டெல்லி வந்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலரை சந்தித்து பேசிய அவர் இன்று மாலை பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். 


பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் மேற்குவங்கத்துக்கு தேவையான கூடுதல் தடுப்பூசிகள், மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் மம்தா பானர்ஜி கோரியதாக கூறப்படுகிறது.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ''மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை சந்தித்து பேசினேன். கரோனா சூழல், மாநில வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசினேன். அவரும் கவனிப்பதாக கூறினார்.


தொடர்ந்து அவர் கூறுகையில் ''பெகாசஸ் ஒட்டுக்கேட்பு மென்பொருள் மூலம், நீதித்துறையைச் சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்கள், மிக உயர்ந்த பொறுப்புகளில் இருப்போர்கூட கண்காணிக்கப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். இதுபற்றி விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்'' எனக் கூறினார்.

 

Tags :

Share via