ஆடிப்பெருக்கை வரவேற்போம் !

by Writer / 30-07-2021 06:32:53pm
ஆடிப்பெருக்கை வரவேற்போம் !


(ஆடிப்பெருக்கு ஆகஸ்ட் 3)

 தமிழ்நாட்டின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான பதினெட்டாம் பெருக்கு பண்டிகையாகும். 
குறிப்பாக காவிரி நதி பாயும் பகுதியில் இக்கொண்டாட்டம் பிரசித்தம். விவசாயிகள் புதுவெள்ள நீரைத் தொழுது தங்கள் உழவுப் பணிகளைத் தொடங்குவர். ஆடிப்பட்டம் தேடி விதை என்னும் முதுமொழி இதில் இருந்துதான் தோன்றியது.ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை பெருக்கு என்பார்கள். அந்த ஆறு பாயும் கரையோர பகுதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக படித்துறைகள் அமைத்திருப்பார்கள். அந்த படித்துறைகள் 18 படிகள் கொண்டதாக இருக்கும்.
ஆடி மாதம் அன்று அந்த 18 படிகளும் மூழ்கி விடும் அளவுக்கு புது வெள்ளம் கரைபுரண்டு ஓடும். அந்த அளவுக்கு ஆடியில் பருவ மழை பெய்யோ பெய் என்று பெய்யும். அந்த காலத்தில் பருவ மழைகள் குறித்த காலத்தில் பெய்தது. (இந்த ஆண்டு இன்னும் வெயில் 100 டிகிரிக்கு குறையவில்லை). ஆடி மாத மழையால் ஏற்படும் புது வெள்ளத்தை வரவேற்று ஒரு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற பண்டைய தமிழரின் எண்ணத்தில் உருவானதே ஆடி பதினெட்டாம் பெருக்கு என்கிற ஆடிப் பெருக்கு.
இந்த ஆடிப்பெருக்கை காவிரிக்கரையில் கொண்டாட காரணம் உண்டு.அதற்கு ஒரு கதை உள்ளது. கைலாயத்தில் சிவன்-பார்வதி திருமணத்தின் போது வடபுலம் தாழ்ந்தது. தென் புலம் உயர்ந்தது. இதனால் அகத்திய முனிவரை, தென் திசைக்கு சென்று பூமியை சமநிலைப்படுத்துமாறு சிவபெருமான் கேட்டுக் கொண்டார்.சிவனை திருமணம் செய்வதற்காக பார்வதி ஒற்றைக் காலில் தவம் இருந்த போது கையில் ஒரு மாலையும் வைத்திருந்தாள். அந்த மாலையை ஒரு பெண்ணாக்கி, அகத்திய முனிவரிடம் வழங்கினாள். அவரும் அந்த பெண்ணை தனது கமண்டலத்தில் அடக்கி வைத்திருந்தார்.
அவர் தென்னகம் நோக்கி வரும் போது அவரது கமண்டலத்தில் இருந்து வழிந்த தண்ணீரே காவிரி ஆனது. எனவே பார்வதி வழங்கிய அந்த பெண்ணான காவிரிக்கு மணவிழா நடத்துவதுபோல ஆடி பதினெட்டாம் பெருக்கைக் கொண்டாடுகிறார்கள். கமண்டலத்தில் மீதம் இருந்த தண்ணீரை அகத்தியர் எடுத்துச் சென்று தான் வசித்த பொதிகை மலையில் கொண்டு விட... அது தாமிரபரணி ஆனது என்கிறது புராணக் கதை.
சிவகங்கையில் இருந்து காளையார் கோவில் செல் லும் வழியில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொல்லங்குடி. இங்குள்ள வெட்டு டையார் காளியம்மன் கோவிலில், ஆடிப்பெருக்கு அன்று அம்பாள் சன்னதி முழுவதும் பூக்களால் நிரப்பி, பூச்சொரிதல் விழா நடத்தப்படுகிறது. இங்கு தினமும் காலையில் அய்யனார் மீதும், மாலையில் காளியம்மன் மீதும் சூரியஒளி விழுவது மிகவும் விசேஷமாகத் கருதப்படுகிறது.
ஆடிப்பெருக்கு தினத்தில் மன்னார்குடி ஸ்ரீசங்கர மடத்தில் இருந்து மாலை புறப்படும் ‘காவிரி அம்மன் உலா’ ஆற்றங்கரையை அடையும். திரளான பக்தர்களுடன் மேள தாளத்துடன் இந்த உலா செல்லும். படிக்கரையில், காவிரி அம்மனாக அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்குக்கு பூஜைகள் நடக்கும். சந்தனாபிஷேகம், பாலாபிஷேகம், தேனாபிஷேகம் முதலியவற்றை பொது மக்களின் சங்கல்பத்துடன் துவங்கி, காவிரி அம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபாடு நடக்கும். அங்கு கூடி இருக்கும் உள்ளூர் மக்கள், கங்கையில் ஆரத்தி விடுவது போல் வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி நதி நீரில் மிதக்கவிடுவர்.

ஆடி 18-ம் பெருக்கிற்கு தனி சக்தி உண்டு. ஆடி மாதம் என்பது கடக மாதம். இந்த கடக ராசியில் பூசம், புனர்பூசம், ஆயில்யம் என்ற 3 நட்சத்திரங்கள் இருக்கிறது. இந்த ஆடி 18 அன்று பூசம் நட்சத்திரத்தை விட்டு விட்டு ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சூரியன் மாறுவார். அந்த சனி நட்சத்திரத்தை விட்டு விட்டு புதன் நட்சத்திரத்திற்கு சூரியன் வரும் போது அது ஒருவித சக்தியைக் கொடுக்கும். இதனால்தான் இந்த நாட்களில் தாலி மாற்றுவது போன்றெல்லாம் செய்ய வேண்டிய பழக்கத்தை நம் மூதாதையர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.
காவிரியில் புதுவெள்ளம் பொங்கி வரும் பதினெட்டாம் பெருக்கு தினத்தன்று வீடு களில் பலவகை சித்ரான் னங்கள், பொங்கல், பாயாசம் ஆகியவற்றை செய்து சுவாமிக்கு நிவேதனம் செய்து சாப்பிட வேண்டும்.
காவிரிக் கரையோர ஊர்களில் குடியிருப்பவர்கள் கட்டுச்சாதம் கட்டிக் கொண்டு போய் காவேரியம் மனைக் கும்பிட்டு விட்டுச் சாப்பிடுவார்கள். ‘பதினெட்டாம் பெருக்கு’ அன்று வீட் டில் சர்க்கரைப் பொங்கல், தேங்காய் சாதம், புளியஞ்சாதம், எலுமிச்சை சாதம் போன்று குறைந்தது நாலு வகை சாதம் செய்ய வேண்டும். மற்றபடி பாயாசம், வடை, வற்றல், அப்பளம் வகைகளும் உண்டு.தலைப்பாகை அணியும் அகத்தியர்
ஈரோடு மாவட்டம் காங்கேயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவிலில் ஆடிப்பெருக்கு அன்று சிவனுக்கு காவிரி நீர் அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். அகத்தியர் இங்கு வந்து காவிரி உருவாகக் காரணமானார் என்பது நம்பிக்கை. அதனால் ஆடிப்பெருக்கு அன்று, ஒருநாள் மட்டும் அகத்தியருக்கு இங்கு தலைப்பாகை அணிவித்து பூஜைகள் செய்து மரியாதை செய்யப்படுகிறது.
நாமக்கல்லில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மோகனூர். இந்த தலத்தில் உள்ள சுவாமியின் திருநாமம் - ஸ்ரீஅசலதீபேஸ்வரர். மூலவரின் சன்னதியில் எப்போதும், அசையாமல் ஒளிர்ந்தபடி இருக்குமாம் தீபம்; இந்தத் தலத்தின் சிறப்பு... சுவாமியை தரிசித்தபடி அப்படியே திரும்பினால், காவிரித்தாயை தரிசிக்கலாம். காவிரி வடக்கில் இருந்து தெற்கு நோக்கி ஓடும் தலம் இது என்பர்! எனவே காசிக்கு நிகரான திருத்தலம் எனப்போற்றுவர். ஆடிப்பெருக்கு நாளில், சுவாமி மற்றும் அம்பாளுக்கு, காவிரி நீரால் அபிஷேகித்து, சிறப்பு பூஜைகள் செய்கின்றனர்.

--------------------

கட்டுரை -ர. சக்தி --------

 

Tags :

Share via