பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்பு : பெண் தலை துண்டித்துக் கொடூர கொலை
திண்டுக்கல்லில் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவரான பசுபதி பாண்டியன், கடந்த 2012 ஜனவரி 10ஆம் தேதி திண்டுக்கல் அடுத்துள்ள நத்தவனப்பட்டியில் உள்ள அவரது வீட்டிலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்குத் தொடர்பாக, தூத்துக்குடி மாவட்டம், மூலக்கரை பகுதியைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உள்பட 18 பேர் மீது தாடிக்கொம்பு போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய 18 பேரில், புறா மாடசாமி, முத்துப்பாண்டி உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்துவிட்டனர்.
சுபாஷ் பண்ணையார், ஆறுமுகசாமி, நடராஜன், நிர்மலா, அருண்மொழி, அருள் ஆனந்தன், பிரபு, அந்தோணி, ரமேஷ், அருள் உள்ளிட்ட 15 பேர் மீது திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல் இபி. காலனியை சேர்ந்த நிர்மலா என்பவர் மர்ம நபர்களால் புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், இபி காலனியில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகள் காத்துக் கொண்டிருந்த இடத்தில், நிர்மலா நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு சென்ற மர்ம நபர்கள் நிர்மலாவின் தலையை துண்டித்து கொலை செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த தாடிக்கொம்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நிர்மலாவின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அவரது தலையை போலீசார் தேடியபோது, திண்டுக்கல் நந்தவனப்பட்டி அருகே பசுபதி பாண்டியனின் வீட்டருகே பெண்ணின் தலை மீட்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் எஸ்.பி., சீனிவாசன், டிஐஜி விஜயகுமாரி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags :