வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம்... அ.தி.மு.க., பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு...

by Admin / 28-08-2021 01:55:24pm
வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம்... அ.தி.மு.க., பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு...

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. உறுப்பினர்கள், சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
 
தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் மீது பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், தீர்மானத்தை கொண்டு வந்த முதலமைச்சர் பாதகங்களை மட்டுமே கூறியுள்ளதாகவும், சாதகங்களை தெரிவிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார். வேளாண் சட்டங்கள் குறித்த பாதகங்களையும், விவசாயிகளின் கோரிக்கைகளையும் மத்திய அரசிடம் நேரடியாக கொண்டு செல்ல வேண்டும் என்றும், அதுகுறித்த சந்தேகங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து பதில் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர், 3 வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு பேசியதா? என கேள்வி எழுப்பினார்.
 
இதனையடுத்து பேசிய அமைச்சர் துரைமுருகன், எதிர்கட்சி துணைத்தலைவர் என்ன பேசுகிறார் என்பதை யூகிக்க முடியவில்லை என்றும், விவசாயிகளுக்கான தீர்மானத்தை ஆதரிக்கிறீர்களா? இல்லையா? எனவும் ஆவேசமாக கேள்வி எழுப்பினார். இதனால் அவையில் இருந்து அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணியான பா.ஜ.க.வை சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இவற்றை தவிர காங்கிரஸ், பா.ம.க., சி.பி.எம்., ம.தி.மு.க., வி.சி.க., தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்ததால், சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

 

Tags :

Share via