திருப்பதிக்கு வந்த பக்தர்கள் போராட்டம்
திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கான இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் சீனிவாசம் வளாகத்தில் உள்ள டோக்ன் கவுன்டர் மூடப்பட்டதால், இலவச தரிசன டோக்கனை நேரில் வாங்க வந்து ஏமாற்றம் அடைந்த சுமார் 30 ஆயிரம் பக்தர்கள், இலவச தரிசன டோக்கன் வழங்க வேண்டும் என்று கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கான இலவச தரிசன டோக்கன்கள் நாளை முதல் ஆன்லைனில் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்நிலை, நாளை வரை திருப்பதியில் உள்ள சீனிவாசம் கட்டட வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இலவச தரிசன டோக்கன் வழங்கும் கவுண்டரில் நேற்றே டோக்கன்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன. எனவே அந்த கவுண்டரை தேவஸ்தானம் மூடி உள்ளது.
இந்நிலையில், இன்றும் இலவச தரிசன டோக்கன் கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சீனிவாசம் வளாகத்திலுள்ள இலவச தரிசன டோக்கன் குவிந்தனர். கவுண்டர் மூடப்பட்டிருந்த நிலையில் இனிமேல் இங்கு இலவச தரிசனம் வழங்கப்படாது என்று அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் கூறினர். இதனால் ஆவேசம் அடைந்த பக்தர்கள் இலவச தரிசன டோக்கன் வழங்க வேண்டும் என்று கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒருகட்டத்தில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சீனிவாசம் கட்டிடம் எதிரில் இருக்கும் சாலையில் அமர்ந்து போக்குவரத்தை தடுத்து நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் பக்தர்களை பலவந்தமாக அப்புறப்படுத்தி இரண்டு பேரை மட்டும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
முன்னதாக திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், நாளை (செப்டம்பர் 25ஆம் தேதி) முதல் பக்தர்கள் இலவச தரிசனம் டோக்கன்களை ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம். செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை ஏழுமலையானை இலவசமாக தரிசிக்கும் வகையில் இலவச தரிசனம் டோக்கன்கள் ஆன்லைனில் வழங்கப்படும். இதனால் திருப்பதி உள்ள சீனிவாசம் கட்டிட வளாகத்தில் செயல்படும் இலவச தரிசன கவுண்டர் மூடப்படும்.
இனிமேல் ஏழுமலையானை தரிசிப்பதற்காக திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான அத்தாட்சி அல்லது மூன்று நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சர்டிபிகேட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை உடன் கொண்டு வரவேண்டும். மேலும், இம்மாதம் 24ஆம் தேதி காலை 9 மணிக்கு அக்டோபர் மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது
Tags :