லட்சுமி நரசிம்மர் மலைக்கோயிலுக்கு ரோப் கார்!

by Editor / 11-06-2021 02:06:38pm
லட்சுமி நரசிம்மர் மலைக்கோயிலுக்கு ரோப் கார்!

108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அமைந்திருக்கிறது. இந்த கோயில் சுமார் 750 அடி உயரமுள்ள செங்குத்தான பாறையின் மீது அமைந்து அமைந்திருக்கிறது. 1305 படிகள் ஏறிச் சென்றால் அமிர்தவல்லி தாயார் மற்றும் யோக நரசிம்மரை தனித்தனி சன்னதிகளில் தரிசனம் செய்யலாம்.

செங்குத்தான படிக்கட்டுகள் வழியாக பக்தர்கள் ஏறி தரிசனம் செய்வதில் சிரமம் இருப்பதால் ரோப் கார் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது பக்தர்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்தது. இதை அடுத்து 2014 ஆம் ஆண்டில் 9.50 கோடி மதிப்பீட்டில் ரோப்கார் அமைக்கும் பணி தொடங்கியது . இந்நிலையில் பணிகள் முடிவுறும் தருவாயில் இருக்கிறது. இதையடுத்து இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, ரோப் கார் பணிகளை ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ''கேபிள் இணைப்பு பணிகள் முடிந்த நிலையில் பெட்டிகளை பொருத்தி பாதுகாப்பு சோதனை நடத்த வேண்டும். இதற்கு மூன்று மாத காலமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு ரோப் கார் இந்த ஆண்டுக்குள் பக்தர்களின் பயன்பாட்டுக்கு வந்துவிடும்'' என்று உறுதியளித்தார். ''சோளிங்கர் கோயிலின் மலைப்பாதையில் செல்லமுடியாத பக்தர்களை டோலி மூலம் சுமந்து செல்லும் தொழிலாளர்கள் இருக்கின்றனர். ரோப் கார் திட்டத்தினால் அவர்களுக்கு வேலை இல்லாமல் போகும். அதனால் அவர்களுக்கு மாற்று பணிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்'' என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், ''தமிழகத்தில் குடமுழுக்கு விழா பணிகள் நடைபெற இருக்கின்ற கோயில்கள் பட்டியல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதன்பின்னர் குடமுழுக்கு விழா நடைபெற உள்ள கோயில்களின் பட்டியலை முதல்வர் வெளியிடுவார்'' என்றார். ''தமிழ்நாட்டில் கோயில் நில ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் பார்க்காமல் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றும் அவர் தெரிவித்தார்.

''மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சோளிங்கர் லஷ்மி நரசிம்மர் திருக்கோயிலில் பக்தர்களின் வசதிக்காக ரோப் கார் அமைக்கும் பணிகள் 2010-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தாமதமாக நடைப்பெற்று வந்த நிலையில், அப்பணிகளை இன்று பார்வையிட்டு ஒரு சில மாதங்களில் மக்கள் பயன்பாட்டிற்க்கு வரும் வகையில் ஆய்வு மேற்கொண்டோம். உடன் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்'' என்று தனது சமூக வலைத்தள பக்கத்திலும் குறிப்பிட்டுள்ளார் அமைச்சர்.

லட்சுமி நரசிம்மர் மலைக்கோயிலுக்கு ரோப் கார்!
 

Tags :

Share via