தகவல் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு  சைபர் பாதுகாப்பு குறித்தபயிற்சி:  அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பு 

by Editor / 06-08-2021 04:01:55pm
தகவல் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு  சைபர் பாதுகாப்பு குறித்தபயிற்சி:  அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பு 

 

தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் சென்னையில் தகவல் பாதுகாப்பு அலுவலர்களுக்கான சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில் கூறியதாவது:
தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் மூலம் இணையம் நமது செயல்பாடுகள் மற்றும் வாழ்வியல் முறையை மாற்றியுள்ளதை நாம் அனைவரும் அறிந்துள்ளோம். தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உள்ளார்ந்த சமூக பொருளாதார வளர்ச்சியை அடைவதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. இதன் மூலம் நாம் வேலைவாய்ப்பினை உருவாக்கி உள்ளதுடன் வணிக சூழலையும் மேம்படுத்தியுள்ளோம். மேலும் மின் காற்றலை புகுத்தியதுடன் குடிமக்களுக்கான பெரும்பாலான அரசு சேவைகளையும் இணையவழியில் வழங்கி வருகிறோம்.


நமது அனைத்து செயல்பாடு களையும் தானியங்குபடுத்தி இணைய வழியில் சேவைகளை வழங்கியுள்ளதுடன், அவற்றின் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பிலும் கவனம் செலுத்தி வருகிறோம், கொரோனா தொற்று பரவும் இந்த நேரத்தில், ஒவ்வொரு நாளும் தரவு திருட்டு மற்றும் பாதுகாப்பு மீறல்கள் பற்றிய செய்திகள் வருகிறது. எனவே, மாநிலத்தில் ஒரு தகவல் பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பை செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தை இது நமக்கு உணர்த்துகிறது.


அரசு மற்றும் பொதுத் தரவுகளைப் பாதுகாக்கவும், மாநிலத்தின் முக்கியமான தகவல் உள்கட்டமைப்புகளை பாதுகாத்திடவும், ஒரு ‘‘சைபர் பாதுகாப்பு கட்டமைப்பு தமிழ்நாடு" தகவல் தொழில்நுட்பவியல் துறையால், எல்காட் மற்றும் சென்னை, சி-டாக் நிறுவனங்கள் வழியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.


இவ்வாறு தகவல் உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதன் மூலம், நெருக்கடி ஏற்படும் சூழலில் துறையின் இணையவழி செயல்பாடுகளுக்கு குறைந்தபட்ச பாதிப்பு அல்லது பாதிப்பு இல்லாமல் தொடர்ந்து செயல்படுவது உறுதி செய்யப்படுகிறது.
சைபர் பாதுகாப்பு கட்டமைப்பு தமிழ்நாடு திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநிலத்தில் ஒரு ‘‘சைபர் நெருக்கடி மேலாண்மை திட்டம்’’ உருவாக்கப்படுவதுடன், 24/7 இயங்கும் விதத்தில் ‘‘தமிழ்நாடு பாதுகாப்பு இயக்க மையம்’’ ஒன்று சென்னை பெருங்குடி எல்காட் டி-ன் மாநிலத் தரவு மையத்தில் சி டிஏசி நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ளது.ஏற்கனவே 36 செயலகத் துறைகளில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட ‘‘முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு" சைபர் பாதுகாப்பு குறித்த பயிற்சி மற்றும் விழிப்புணர்வு வழங்கப்பட்டுள்ளது.


இதேபோன்று எல்காட்டி மற்றும் சி டிஏசி ஆகியவை இணைந்து, ‘‘துறைசார் தகவல் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு’’ சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
தகவல் பாதுகாப்பு அதிகாரிகள், தமது துறைக்கும் தமிழ்நாடு பாதுகாப்பு இயக்க மைய ஊழியர்களுக்கும் இடையே ஒரு பாலமாக இருப்பார்கள். எனவே, துறைசார் தகவல் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் இந்த விழிப்புணர்வு பயிற்சி வெற்றிக்கு வழிவகுக்கும் இவ்வாறு அமைச்சர் கூறினார்.

 

Tags :

Share via