ஆப்கன்.,க்கு இந்தியா பரிசளித்த ஹெலிகாப்டரை வசப்படுத்திய தலிபான்கள்

by Admin / 12-08-2021 03:20:09pm
ஆப்கன்.,க்கு இந்தியா பரிசளித்த ஹெலிகாப்டரை வசப்படுத்திய தலிபான்கள்

காபூல்: ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு கடந்த 2019ல் இந்தியா பரிசாக அளித்த தாக்குதல் ஹெலிகாப்டரை தலிபான்கள் வசப்படுத்தியுள்ளனர்

.ஆப்கனிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வரும் நிலையில், அங்கு தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் புறநகர் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்ட தலிபான்கள், மாகாண தலைநகர்களையும் கைப்பற்ற துவங்கியுள்ளனர்

. தலிபான்களில் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல், ஆப்கன் ராணுவம் திணறி வருகிறது. இந்த பதற்றமான சூழலில், ஆப்கன் ராணுவத்துக்கு இந்தியா பரிசாக அளித்த Mi-24 என்ற ராணுவ தாக்குதல் ஹெலிகாப்டரையும் தலிபான்கள் வசப்படுத்தியுள்ளனர்.

ஆப்கனின் கண்டூஸ் பகுதியில் தலிபான்கள் இந்த ஹெலிகாப்டருக்கு அருகில் இருப்பது போன்ற புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகியுள்ளன. ஆனால் ஹெலிகாப்டரின் ரோட்டார் பிளேடுகளைக் காணவில்லை.

ஒருவேளை தலிபான் கட்டுப்பாட்டுக்குள் இந்த இந்திய தாக்குதல் ஹெலிகாப்டர் வந்தால் அவர்கள் அதைப் பயன்படுத்த முடியாதபடி பிளேடுகள் உடைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கடந்த 2019-ல் இந்தியா ஆப்கானிஸ்தான் ராணுவப் படைக்கு Mi-24 தாக்குதல் ஹெலிகாப்டர்களை பரிசாக வழங்கியது. இதோடு மூன்று சீட்டா லைட் ஹெலிகாப்டர்களையும் இந்தியா அளித்தது. இந்திய ஹெலிகாப்டர் பிடித்து வைத்த சம்பவம் ஆப்கன் படைகளின் இயலாமையையும் அரசின் பலவீனத்தையும் காட்டுகிறது.

 இப்போது தலிபான்கள் 65 சதவீத இடங்களை தங்கள் வசம் கொண்டு வந்து விட்டனர். தெற்கு ஆப்கானிஸ்தானில் போலீஸ் தலைமைச் செயலகத்தையும் தலிபான்கள் நேற்று கைப்பற்றினர். மாகாண தலைநகரங்களின் ராணுவ தலைமையிடங்கள் சிலவற்றையும் தலிபான்கள் கைப்பற்றினர்.

 

Tags :

Share via