2 வயது ஆண் குழந்தை கொலை

by Staff / 31-12-2022 11:32:26am
2 வயது ஆண் குழந்தை கொலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள சீராப்பள்ளி மூப்பனார் கோவில் தெருவை சேர்ந்தவர் கபில்வாசன் (32). இவரது மனைவி ராஜாமணி (24). இந்த தம்பதிக்கு நவியா ஸ்ரீ (5) என்ற பெண் குழந்தையும், தருண் (2½) என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். கபில்வாசன் அந்த பகுதியில் உள்ள ஆலையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதி அவர்களது உறவினர் தியாகராஜன் என்பவரது வீட்டின் மாடியில் குடியிருந்து வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று கபில்வாசன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் மனைவி ராஜாமணி மற்றும் குழந்தைகள் இருந்துள்ளனர். இதில் குழந்தை தருண் தூங்கிக் கொண்டிருந்தான். அப்போது அதே ஊரைச் சேர்ந்த கபில்வாசனின் உறவினரான வாலிபர் ஒருவர் இரவு அவர்கள் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் அவர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார். இதனால் ராஜாமணி தண்ணீர் எடுத்து வர உள்ளே சென்றுள்ளார்.

இந்த நிலையில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை தருணை தூக்கி வாலிபர் கையால் அடித்தும் காலால் உதைத்தும் நெஞ்சில் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதைப்பார்த்த ராஜாமணி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உடனடியாக குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை தருண் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிறகு குழந்தையை ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று டாக்டரிடம் காண்பித்தனர். அங்கிருந்த டாக்டர்களும் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு குழந்தையின் பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர்.இதுபற்றி தகவல் அறிந்ததும் நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று குழந்தை தருணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகுல்(23) என்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அந்த வாலிபர்தான் குழந்தையை அடித்துக்கொன்றாரா? குழந்தையை கொல்ல காரணம் என்ன? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.2½ வயது ஆண் குழந்தை அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo