தூத்துக்குடி விமான நிலைய கட்டுமான பணி:நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி ஆய்வு.

by Editor / 24-08-2024 12:02:18am
தூத்துக்குடி விமான நிலைய கட்டுமான பணி:நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி ஆய்வு.

தூத்துக்குடி விமான நிலையத்தில், புதிதாகக் கட்டப்பட்டு கொண்டிருக்கும் விமான நிலைய கட்டுமான பணிகளை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி ஆய்வு செய்தார். மேலும், புதிய முனையக் கட்டிடம் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழாவைக் கனிமொழி கருணாநிதி எம்.பி துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, விமான நிலைய உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

வெளிநாடு மற்றும் வெளி மாநில மக்களின் வசதிக்காக, துாத்துக்குடி விமான நிலையம் தற்போது விரிவாக்கம் செய்யப்படுகிறது. துாத்துக்குடி - சென்னை இடையே, தினமும் ஐந்து முறையும், துாத்துக்குடி - பெங்களூரு இடையே தினமும் இரண்டு முறையும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில்,கூடுதல் விமானங்களை கையாளும் வகையில், 227.33 கோடி ரூபாய் மதிப்பில் புதிய முனையம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. 17,341 சதுர மீட்டரில் அமைக்கப்படும் புதிய முனையத்தில், விமான போக்குவரத்து கண்காணிப்பு, கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் அதை சார்ந்த அலுவலக கட்ட டங்கள், தீயணைப்பு துறை கட்டடங்கள் உள்ளிட்டவை கட்டப்படுகின்றன.

துாத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விமான நிலையத்தின் புதிய முனையத்திற்கு செல்லும் வகையில், 1 கி.மீ.,க்கு இணைப்பு சாலை புனரமைக்கும் பணியும் நடக்கிறது. புதிய முனையத்தின் புறப்பாடு பகுதியில் நான்கு வாயில்களும், 21 பயணியர், 'செக் இன் கவுன்டர்'களும், மூன்று 'ஏரோ பிரிட்ஜ்'களும், இரண்டு வருகைக்கான, 'கன்வேயர் பெல்ட்'களும் அமைக்கப்படுகின்றன.

மேலும், ஒரே நேரத்தில் ஐந்து விமானங்களை நிறுத்தும் வகையிலான வசதிகள், 500 பயணியர் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகள், இரண்டு வி.ஐ.பி., அறைகள், 'லிப்ட்' வசதிகள், பயணியர் அதிகமாக வருகை தரும் நேரங்களில், ஒரு மணி நேரத்திற்கு, 1,440 பயணியரை கையாளும் வகையிலான வசதிகள் என, அதிநவீன வசதிகளுடன் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகின்றன.

புதிய முனையம் நான்கு நட்சத்திர அந்தஸ்து பெற்ற பசுமை கட்டடமாக அமைக்கப்படுகிறது. முனைய கட்டடங்கள் முழுதும் சூரியசக்தி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், புதிய முனையத்தில், 113.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 3,115 மீட்டர் நீளத்திற்கு விமான ஓடுதளம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இதனால், மிகப்பெரிய ஏ - 321 ரக ஏர்பஸ் விமானங்களும் வந்து செல்ல முடியும். ஓடுதளம் அமைக்கும் பணி, இம்மாத இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags : தூத்துக்குடி விமான நிலைய கட்டுமான பணி:நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி ஆய்வு.

Share via