ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை  சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்

by Editor / 19-08-2021 07:39:43pm
 ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை  சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்


'தொட்டால் விழும் கட்டடம் கட்டிய விவகாரத்தில் ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை தேவை என 
சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 

சென்னை புளியந்தோப்பில் கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பு குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ளது. இங்கு வீடுகள் தரமற்றதாக இருப்பதாக மக்கள் குற்றச்சாட்டினர்.


 இதுகுறித்து தகவலறிந்த ஊரக தொழில்துறை மற்றும் குடிசை மாற்றுவாரிய அமைச்சர் தா.மோ.அன்பரசனும், அமைச்சர் சேகர்பாபுவும் புளியந்தோப்பிற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.இந்நிலையில் புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரம் தொடர்பாக எழும்பூர் தொகுதி உறுப்பினர் பரந்தாமன், மற்றும் காங்கிரஸ் உறுப்பினர் செல்வ பெருந்தகை ஆகியோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தனர். குடியிருப்பு தரமற்ற முறையில் கட்டப்பட்டிருப்பதாக பொதுமக்கள் புகார் எழுந்துள்ளதால் இதனை கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இந்த கட்டடம் 2018ல் தொடங்கப்பட்டு 2019ல் முடிக்கப்பட்டது.

தொட்டால் சிணுங்கி பார்த்திருக்கிறோம், ஆனால் தொட்டாலே விழுகின்ற சிமெண்டை கண்டு பிடித்த ஆட்சி கடந்த அதிமுக ஆட்சி. 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சி கட்டிமுடித்த அனைத்து கட்டடங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்
.இந்த கட்டடம் கட்டி முடித்த பிறகு இதற்கு சான்றிதழ் அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கடந்த ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மீது கிரிமினல் நடவடிக்கை தேவை. கட்டட ஒப்பந்ததாரர் மீது கிரிமினல் வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.இந்த கட்டடம் முறைகேடாக கட்டப்பட்டுள்ளது உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரிகிறது” என்றார்.

இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன் , ஏற்கனவே கட்டப்பட்ட குடியிருப்புகள் பழுதடைந்து உள்ளதால் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்ட கட்டடம் இது. புளியந்தோப்பு குடியிருப்பை ஆய்வு செய்ய ஐஐடி குழுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்; அவர்கள் அனுப்பும் அறிக்கையின் படி தவறு செய்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் முதல்வர் நிச்சயம் வேடிக்கை பார்க்கமாட்டார் என்றார்.

 

Tags :

Share via