நெல்லையில் போலீஸ் நடத்திய கஞ்சா வேட்டை ; இரு மாதத்தில் 19 பேர் கைது, 6 கிலோ கஞ்சா பறிமுதல்

by Editor / 25-04-2025 04:56:01pm
நெல்லையில் போலீஸ் நடத்திய கஞ்சா வேட்டை ; இரு மாதத்தில் 19 பேர் கைது, 6 கிலோ கஞ்சா பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் கஞ்சா புழக்கம் அதிகரித்திருப்பது காவல்துறையினரின் தொடர் நடவடிக்கைகளின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர ரோந்து மற்றும் திடீர் சோதனைகளில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் கஞ்சா பிடிபட்டது. இது தொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மொத்தம் 6 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

தேவர்குளம், சுத்தமல்லி, பணகுடி, பாளையங்கோட்டை, சிவந்திபட்டி, களக்காடு, அம்பாசமுத்திரம், திசையன்விளை, கல்லிடைக்குறிச்சி, பத்தமடை, பாப்பாக்குடி ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிக கைதுகள் நிகழ்ந்துள்ளன. சமீபத்திய நடவடிக்கைகளில், தேவர்குளம் பகுதியில் 82 கிராம் கஞ்சாவுடன் மதன், பாளையங்கோட்டையில் 10 கிராம் கஞ்சாவுடன் செல்வம், பாப்பாக்குடியில் 60 கிராம் கஞ்சாவுடன் தங்க மாரியப்பன் மற்றும் ஆதிமூலபெருமாள், பத்தமடையில் 60 கிராம் கஞ்சாவுடன் செல்வ ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

திசையன்விளையில் 100 கிராம் கஞ்சாவுடன் லோகேஷ், கல்லிடைக்குறிச்சியில் 298 கிராம் கஞ்சாவுடன் மகேஷ், களக்காட்டில் 1 கிலோ 50 கிராம் கஞ்சாவுடன் மணிகண்டன், அம்பாசமுத்திரத்தில் 100 கிராம் கஞ்சாவுடன் சிவா, சிவந்திபட்டியில் இருவேறு சம்பவங்களில் தலா 1 கிலோ மற்றும் 2 கிலோ கஞ்சாவுடன் சதீஷ், துரைபாண்டி மற்றும் வள்ளிநாயகம், சுத்தமல்லியில் இருவேறு சம்பவங்களில் 75 கிராம் கஞ்சாவுடன் ராகுல் மற்றும் இசக்கிமுத்து, பணகுடியில் 1½ கிலோ கஞ்சாவுடன் சித்ரவேல் பாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட வள்ளிநாயகம் ஏற்கனவே கஞ்சா வழக்கில் சிறையில் இருந்த நிலையில் மீண்டும் ஈடுபட்டதால் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கஞ்சா விற்பனையை ஒழிப்பதில் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் கஞ்சா விற்பனை அல்லது பயன்பாடு குறித்த தகவல்களை உடனே தெரிவித்து உதவ வேண்டும் என்றும் காவல்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். அப்போதுதான் திருநெல்வேலியை போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக மாற்ற முடியும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
 

 

Tags :

Share via