அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் 30.05.2025 அன்று முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பப் பதிவு செய்ய நடவடிக்கை.

by Editor / 28-05-2025 09:25:27am
 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் 30.05.2025 அன்று முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பப் பதிவு செய்ய நடவடிக்கை.

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 27ஆம் தேதியோடுவிண்ணப்ப பதிவு முடிவடைந்த நிலையில், அதனை நீட்டி உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2025-26-ஆம் கல்வியாண்டிற்கான மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 07.05.2025 அன்று முதல் 27.05.2025 வரை www.tngasa.in என்ற இணையதள வாயிலாக பெறப்பட்டது. இதுவரை 2,25,705 விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்யப்பட்டுள்ளன. 1,08,619 மாணவிகள், 76,065 மாணவர்கள் மற்றும் 78 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1,81,762 மாணாக்கர்கள் கட்டணம் செலுத்தி உள்ளனர்.

சிறப்புப் பிரிவு மாணாக்கர்களுக்கான தரவரிசைப் பட்டியல் 29.05.2025 அன்று கல்லூரிகளில் வெளியிடப்படும். பொதுப்பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் 30.05.2025 அன்று கல்லூரிகளில் வெளியிடப்படும். கல்லூரி தகவல் பலகைகளில் தரவரிசைப் பட்டியல்கள் ஒட்டப்பட்டு, கல்லூரி இணையதளங்களிலும் வெளியிடப்படும்.

மேலும், 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவு மற்றும் பொது கலந்தாய்விற்கான தகவல்கள், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக மாணாக்கர்களுக்கு அந்தந்த கல்லூரிகளிலிருந்து தெரிவிக்கப்படும்.

27.05.2025-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறிய மாணாக்கர்கள் மற்றும் துணைத்தேர்வு எழுதும் மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் மீண்டும் 30.05.2025 அன்று முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags : 30.05.2025 அன்று முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பப் பதிவு

Share via