அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 5 மாதங்களில் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி மாலை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை மர்ம நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பி ஓடினார். இதற்கு அடுத்த நாள் மாலை, கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து மர்ம நபர் மீது ஆறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு டிசம்பர் 26 ஆம் தேதி கோட்டூர்புரம் பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவரை தனிப்படை காவல்துறையினர் பிடித்தனர்.
அவரிடமிருந்த செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவி வீடியோ கால் மூலம் ஞானசேகரனை அடையாளம் காட்டியதை தொடர்ந்து ஞானசேகரன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணை குழு விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகளும் ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே தேசிய மகளிர் ஆணையமும் பல்கலைக்கழக வளாகத்தில் நேரில் விசாரணை நடத்தியது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்ச ரூபாய் நிவாரணமும் , கல்லூரியில் கட்டணம் இல்லாமல் படிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிட்டது.
பாதிக்கப்பட்ட மாணவியின் முன்னிலையில், ஞானசேகரன் செல்போனில் பேசியதாக கூறப்பட்டதால், அவருக்கு குரல் பரிசோதனையும் செய்யப்பட்டது. பின்னர் அனைத்து விசாரணைகளும் முடிக்கப்பட்டு பிப்ரவரி மாதம் சிறப்பு விசாரணை குழு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது. ஞானசேகரன் வாக்குமூலம் , பாதிக்கப்பட்ட மாணவி அளித்த தகவல்கள் , சொத்து விவரங்கள் , அறிவியல் தொடர்பான ஆதாரங்கள் அடிப்படையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஞானசேகரளுக்கு பத்துக்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளிலும் தொடர்பு இருந்ததால், அந்த வழக்குகளில் தனித்தனியாக கைது செய்யப்பட்டார். ஞானசேகரன் மீது மற்றொரு பெண் அளித்த பாலியல் புகாரில் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் 29 சாட்சியங்கள் , நூற்றுக்கு மேற்பட்ட ஆதாரங்களை சிறப்பு விசாரணை குழு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் தனக்கு தொடர்பு இல்லை என ஞானசேகரன் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்து விட்டது. பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கில் தினசரி விசாரணை நடத்தப்பட்டு5 மாதங்களில் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
Tags : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு.