ஈபிஎஸ்-க்கு திமுகவை விமர்சிக்க தகுதியில்லை-பழனிமாணிக்கம் கண்டனம்

by Editor / 29-09-2021 09:58:28am
 ஈபிஎஸ்-க்கு திமுகவை விமர்சிக்க தகுதியில்லை-பழனிமாணிக்கம் கண்டனம்

தி.மு.க அரசு பொறுப்பேற்ற நான்கே மாதங்களில் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியில் 50 சதவீதத்தை நிறைவேற்றி விட்ட நிலையில், ஒரு சில திட்டங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்து வரும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னாள் மத்திய அமைச்சரும் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினருமான பழனிமாணிக்கம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். எஸ். பழனிமாணிக்கம் தஞ்சையில் செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில், "தி.மு.க தேர்தலின்போது அளித்த வாக்குறுதியில் இதுவரை நான்கு மாதங்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது, குறிப்பாக பல ஆண்டுகளாக காத்திருந்த ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் அருமை பல ஆண்டுகளாக காத்திருந்த விவசாயிகளுக்கு தான் தெரியும், விவசாயிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்திக்கொண்டிருக்கின்றனர். 200க்கும் மேற்பட்ட திட்டங்கள் நிறை வேற்றப்பட்டுள்ள நிலையில், திமுக அரசு ஒரு சில திட்டங்களை மட்டுமே நிறைவேற்றி உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சொல்வது கண்டிக்கத்தக்கது. குறுக்கு வழியில் பதவிக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு திமுக அரசை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை.

உதயநிதி ஸ்டாலினின் திறமை ஆற்றல், பொதுமக்களை சந்திக்கும் விதம் , கேள்வியை எதிர்கொள்ளும் பாங்கு, தமிழக இளைஞர்களுக்கு மிகச்சிறந்த உதாரணமாக இருக்கிறது, தினகரன், ஓ.பன்னீர் செல்வத்தின் மகனைப்போல் இல்லாமல , உதயநிதி ஸ்டாலினின் இரத்தத்தில் அரசியல் ஊறி இருக்கிறது, அவரின் உழைப்பை எங்கள் கட்சிக்கு பயன்படுத்துவதை யாரும் கேள்வி கேட்க முடியாது. திராவிட இயக்கத்தை எதிர்ப்பதாக நினைத்து தி.மு.க.வை தரம் தாழ்ந்து விமர்சிக்கும் சீமான் போன்றவர்களின் வீட்டில் உள்ள குடும்பத்தினர் கூட இந்த விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், இவர்கள் மேடை பேச்சுக்கள் எதிர்கால இளைஞர்களுக்கு நல்லதல்ல" எனக் கூறினார்.

 

Tags :

Share via