முதியோர் இல்லத்தில் 5 பேர் உயிரிழந்ததற்கு காரணம் என்ன..? ஆட்சியர் அளித்த தகவல்.

by Staff / 19-06-2025 11:06:04pm
முதியோர் இல்லத்தில் 5 பேர் உயிரிழந்ததற்கு  காரணம் என்ன..? ஆட்சியர் அளித்த தகவல்.

தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் அருகிலுள்ள கீழ பாட்டாக்குறிச்சி அன்னை நல்வாழ்வு டிரஸ்ட் முதியோர் இல்லத்தை  சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் நடத்தி வந்தார். குடும்பத்தினர், உறவினர்களால் கைவிடப்பட்ட முதியவர்கள் 58 பேர் இங்கு தங்கி இருந்தனர். முதியோர் இல்லத்திலேயே அவர்களுக்கு மூன்று வேளையும் உணவு சமைத்து வழங்கப்பட்டு வந்தது. பக்ரீத் பண்டிகை கடந்த ஏழாம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், அதற்கு அடுத்த நாள் 8-ம் தேதி சுரண்டை அருகே உள்ள வீராணம் பகுதியைச் சேர்ந்த சிலர், அன்றைய தினம் குர்பானி கொடுத்த ஆட்டு இறைச்சியை முதியோர் இல்லத்துக்கு தானமாக கொடுத்தனர். அந்த இறைச்சி சமைக்கப்பட்டு முதியோர் இல்லத்தில் தங்கி இருந்தவர்களுக்கு அன்று மதியம் சோறுடன் சேர்த்து கறி குழம்பாக பரிமாறப்பட்டது.

அன்று இரவே சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 9-ம் தேதி 10-க்கும் மேற்பட்டோர் வாந்தி பேதி, சிறுநீர் பிரச்சினை காரணமாக அவதிப்பட்டதால் உடனடியாக அவர்களை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு முதியோர் இல்லத்தின் நிர்வாகி ராஜேந்திரன் அழைத்துச் சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கிடையே முதியோர் இல்லத்தில் இருந்த மேலும் பலருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. அதே நேரத்தில் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சங்கர் கணேஷ் என்பவர் கடந்த 11 ஆம் தேதி மாலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

விசாரணை: இதனையடுத்து கடந்த 8 ஆம் தேதி சமைக்கப்பட்ட இறைச்சி காரணமாக முதியோர்களுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம் என்று முதியோர் இல்லத்தின் நிர்வாகி கருதினார். எனவே, இது குறித்து சுகாதாரத் துறைக்கு அவர் தகவல் தெரிவித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் இருவர் 12 ஆம் தேதி உயிரிழந்தனர். அடுத்தடுத்து மூன்று பேர் உயிரிழந்த நிலையில் இது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

உணவு ஒவ்வாமையே இதற்கு காரணம் என தெரிவித்த அதிகாரிகள் முதியோர் இல்லத்திற்கு சீல் வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முதியோர் இல்லத்தின் நிர்வாகி ராஜேந்திரன் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் இருவர் உயிரிழந்தனர். சங்கர் கணேஷ் (48), முருகம்மாள் (45), அம்பிகா (40), தனலட்சுமி (70) ,ஆகியோர் தென்காசிமருத்துவமனையிலும், முப்புடாதி (54) பாளையங்கோட்டை மருத்துவமனையில் என மொத்தம் 5 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.

குடிநீரில் ஈ.கோலை பாக்டீரியா: மேலும் 13 ஆம் தேதி தென்காசி அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக 12 பேர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். உணவு ஒவ்வாமை காரணமாக தான் ஐந்து பேர் உயிரிழக்க நேரிட்டதா? என்பது குறித்து அறிய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் முதியோர் இல்லத்தில் கடந்த 12 ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டனர். மேலும் உணவு சமைக்க பயன்படுத்தப்பட்ட குடிநீர், இறைச்சி அன்று சமைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் என மொத்தம் 7 மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தினர். முதியோர் இல்லத்தில் வழங்கப்பட்ட குடிநீரில் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய ஈ.கோலை (E.coli) பாக்டீரியா இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று தெரிவித்தார்

 

Tags : முதியோர் இல்லத்தில் 5 பேர் உயிரிழந்ததற்கு காரணம் என்ன..? ஆட்சியர் அளித்த தகவல்.

Share via