திமுகவினர் பணம் சம்பாதிப்பதற்காக பள்ளிக் கல்வித்துறையையும் பலியிட்டிருப்பது வெட்கக்கேடு. - அண்ணாமலை அறிக்கை.

முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புள்ளி விவரங்களுடன் வெளியிட்டிருக்கும் அறிக்கை..
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது என்பதை, ஒவ்வொரு ஆண்டும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கடந்த 2023 - 2024 கல்வியாண்டில் 42.23% ஆக இருந்த அரசுப் பள்ளி சேர்க்கை விகிதம், 2024 - 2025 கல்வி ஆண்டில் 39.17% ஆகக் குறைந்து, 2025 - 2026 நடப்புக் கல்வி ஆண்டில், 37.92% ஆக மிகவும் குறைந்திருக்கிறது.
நடப்புக் கல்வியாண்டில், தமிழகத்தில் உள்ள 37,595 அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை, 2.39 லட்சமாக இருக்கையில், 12,929 தனியார் பள்ளிகளில், 5.26 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இரண்டு மடங்குக்கும் அதிகமாக, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இருக்கிறது.
தமிழகத்தில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் சொந்த தொகுதி உட்பட, பல அரசுப் பள்ளிகளில் கட்டிடங்கள் இல்லாமல், மரத்தடியில் வகுப்பறைகள் செயல்படுவதும், பள்ளிக் கட்டிடங்கள் இடிந்து விழுவதும், போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படாததும் அரசுப் பள்ளி மாணவர்கள் இடையே ஜாதிய வன்மம் அதிகரித்து, மாணவர்கள் தாக்குதலுக்குள்ளாவதும் கடந்த நான்கு ஆண்டுகளில் மிகவும் அதிகரித்திருப்பதால், அரசுப் பள்ளிகளின் மீது நம்பிக்கை இழந்த பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள்.
இன்னும் சொல்லப் போனால், திமுகவின் கல்விக் கொள்கை என்பதே, தனியார் பள்ளிகளுக்குப் பயன்படும் வகையில்தான் அமைந்திருக்கிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளிகளில் கொண்டு வரப்பட்ட LKG, UKG உள்ளிட்ட தொடக்கக் கல்வி, இன்று தமிழக அரசுப் பள்ளிகளில் நடைபெறுவதில்லை. இதனால், பெருந்தலைவர் காமராஜர், அரசுப் பள்ளிகள் மூலமாகச் செய்த கல்விப் புரட்சி, திமுக அரசால் இன்று பாழ்பட்டுப் போய்விட்டது. திமுகவினர் பணம் சம்பாதிப்பதற்காக , பள்ளிக் கல்வித்துறையையும் பலியிட்டிருப்பது வெட்கக்கேடு. -
அண்ணாமலை
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர்
Tags :