கனிமொழி காரை மறித்து ஆதங்கத்தைவெளிப்படுத்திய திமுக தொண்டர்.

by Editor / 12-09-2025 10:52:52pm
கனிமொழி காரை மறித்து ஆதங்கத்தைவெளிப்படுத்திய திமுக தொண்டர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அண்ணா பேருந்து நிலைய வளாகத்தில் இன்று சங்கரன்கோவில் முதல் சுப்புலாபுரம், சங்கரன்கோவில் முதல் பாம்பு கோவில் வழியாக புளியங்குடி வரை உள்ள இரண்டு புதிய வழித்தடத்தின் பேருந்துகள், குருவிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்டவற்றை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 

இதனை அடுத்து கனிமொழி எம்.பி., அடுத்த நிகழ்ச்சிக்கு வாகனத்தில் ஏறி செல்லும்போது திமுக தொண்டர் மாற்றுத்திறனாளி குருசாமி பாண்டியன் தனக்கு மாதாந்திர உதவித்தொகை வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்த நிலையில் அவரை மற்ற திமுக நிர்வாகிகள் பேசவிடாமல் இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது வாகனத்தை நிறுத்தி கனிமொழி அவரது கோரிக்கையை கேட்டிருந்தபோது மீண்டும் சக  நிர்வாகிகள் பேசவிடாமல் தடுத்தபோது கட்சியை கெடுப்பதே நீங்கள் தான் என்றும் ஆவேசமாகிய குருசாமி பாண்டியன் தான் நீண்ட காலம் திமுகவில் பயணம் செய்து வருவதாகவும் இதுவரை ஒரு பொறுப்பு கூட எனக்கு வழங்கவில்லை எனவும் எனக்கு உதவி மற்றும் அரசு சார்பில் கடன் வேண்டுமென  மனு வழங்கிய அமைச்சர் எம்.பி., எம்.எல்‌.ஏ., மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவு ஆகியவற்றிற்கு இது குறித்து, மனு அளித்தும் எந்தவித பயனும் இல்லை என தெரிவித்த மாற்றுத்திறனாளி தொண்டர், கட்சிக்காரர்களுக்கு இதுவரை எந்தவித பயனும் இல்லை எனவும் சாலை போடுகிறார்கள், காரில் போகிறார்கள் என ஆதங்கம் தெரிவித்த அவர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், வேறு கட்சியில் இருந்து இங்கு வந்து அவர் திமுக கட்சிக்காரர்களுக்கு எப்படி செய்வார் எனவும் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து அவர் கேள்வி எழுப்பிய நிலையில் சுற்றியுள்ள பொதுமக்கள் அனைவரும் கூர்ந்து கவனித்தனர்‌. மேலும் திமுக நிர்வாகி ஒருவர் ஏன் இப்படி பேசுகிறீர்கள் என கேட்டதற்கு அவரிடம் கடிந்து கொண்டார்...

மேலும் இதுகுறித்து சக திமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது மாற்றுத்திறனாளியான குருசாமி பாண்டியன் திமுகவைச் சேர்ந்தவர் தான் என்றும் அவருக்கு திமுக சார்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவரது சொந்த செலவில் மாற்றுத்திறனாளி ஓட்டும் இருசக்கர வாகனம் வழங்கியதாகவும்,
திமுக நிர்வாகிகள் பலரும் அவ்வப்போது அவருக்கு பல்வேறு வகையான உதவிகளை செய்து வந்ததாகவும் தெரிவித்த நிலையில்,  ஏன் இது போன்று நடந்து கொண்டார் எனவும் கேள்விக்குறியாக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

 

Tags : கனிமொழி காரை மறித்து ஆதங்கத்தைவெளிப்படுத்திய திமுக தொண்டர்.

Share via