இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பு 31 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது
கேரளாவில் கடந்த சில நாட்களாக பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டிய நிலையில் நேற்று 19,622 ஆக குறைந்தது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பு 31 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,941 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 5 நாட்களாக பாதிப்பு 42 ஆயிரத்தை தாண்டிய நிலையில், நேற்றைய சரிவு சற்று நிம்மதி அளித்துள்ளது. மொத்த பாதிப்பு 3 கோடியே 27 லட்சத்து 68 ஆயிரத்து 880 ஆக உயர்ந்தது.
கேரளாவில் கடந்த சில நாட்களாக பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டிய நிலையில் நேற்று 19,622 ஆக குறைந்தது. மகாராஷ்டிரத்தில் 3,741, தமிழ்நாட்டில் 1,523 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மற்ற அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது.
கொரோனா பாதிப்பால் கேரளாவில் 132, ஒடிசாவில் 67, மகாராஷ்டிரத்தில் 52 பேர் உள்பட மேலும் 350 பேர் இறந்துள்ளனர். கடந்த மார்ச் 30-ந் தேதி நிலவரப்படி ஒரு நாள் பலி எண்ணிக்கை 354 ஆக இருந்தது.
அதன்பிறகு கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவில் நேற்று உயிரிழப்பு குறைந்துள்ளது. இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,38,560 ஆக உயர்ந்தது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் மட்டும் 1,37,209 பேர் அடங்குவர்.
கடந்த 6 நாட்களாக புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இந்நிலையில் நேற்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
அதாவது நேற்று ஒரே நாளில் 36,275 பேர் நோயின் பிடியில் இருந்து மீண்டு வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 19 லட்சத்து 59 ஆயிரத்து 680 ஆக உயர்ந்தது.
தற்போது 3,70,640 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்று முன்தினத்தை விட 5,684 குறைவு ஆகும்.
கொரோனா வைரஸ்
நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 64,05,28,644 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று 13,94,573 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை எண்ணிக்கை 52.15 கோடியாக உயர்ந்திருப்பது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறி உள்ளது.
Tags :