மீண்டும் திறக்கப்படும் கோவை குற்றாலம்
கொரோனா 2ஆவது அலை காரணமாக போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட கோவை குற்றாலம் சுற்றுலாத் தலம் கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டிருந்தது. கடந்த 6ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் நீர்வரத்து அதிகம் காரணமாக 12ஆம் தேதி முதல் மூடப்பட்டது. நீர்வரத்து குறைந்துள்ளதால் நாளை மீண்டும் திறக்கப்பட உள்ளதாக மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “கோவை குற்றாலத்துக்கு வரும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணிக்கும் நுழைவுக் கட்டணம் செலுத்தும் முன்பு வெப்பநிலைமானியைக் கொண்டு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும்.
சுற்றுலாப் பயணிகள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும். பிற மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனை சான்று அல்லது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும். கோவை குற்றாலத்துக்கு வர விரும்புவோர் https://coimbatorewilderness.com/ என்ற இணையதளத்தில் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு வருபவர்களை 4 குழுக்களாக தினமும் உள்ளே அனுப்ப திட்டமிட்டுள்ளோம். காலை 9 மணி முதல் 9.30 மணி வரை 150 பேர், அதேபோல, காலை 10.30 மணி முதல் 11.00 மணி வரை, நண்பகல் 12 மணி முதல் 12.30 மணி வரை, பிற்பகல் 1.30 மணி முதல் 2.00 மணி வரை தலா 150 பேர் அனுமதிக்கப்படுவார்கள். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 78260 70883 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்” என்றார்.
Tags :



















