காந்தி மதுரையில் மேலாடையை துறந்தது ஏன்?
மகாத்மா காந்தி இனிமேல் மேலாடை அணிவதில்லை என்றும் அரையாடை மட்டுமே அணியப்போவதாகவும் முடிவுசெய்து, அதன்படி அரையாடையுடன் தோன்றிய நகரம் மதுரை. அவர் அந்த ஆடைக்கு மாறிய வீடு, முதன் முதலில் அரையாடையுடன் தோன்றிய இடம் போன்றவை இன்னமும் அந்நகர மக்களால் நினைவுகூரப்படுகின்றன.
மகாத்மா காந்தி 1896லிருந்து 1946வரை 20 முறை தமிழ்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதில் எட்டாவது முறையாக தமிழ்நாட்டிற்கு வந்தது 1921 செப்டம்பரில். அப்போதுதான் இந்த நிகழ்வு நடந்தது.காந்தி முழு ஆடையை விட்டுவிட்டு, அரையாடைக்கு மாறிய ராம்ஜி கல்யாண்ஜியின் இல்லம் இருந்த கட்டடம். தற்போது அங்கு காதி கிராஃப்ட் இயங்கி வருகிறது.
1921 செப்டம்பர் 15ஆம் தேதியன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்திறங்கிய காந்தி, அதற்குப் பிறகு பரங்கிப்பேட்டை, கடலூர், கும்பகோணம், திருச்சி, திண்டுக்கல் வழியாக மதுரையைச் சென்றடைந்தார்.
காந்தி வரப்போகிறார் என்பதால், சில நாட்களாக மதுரையே உற்சாகமாக இருந்தது. இது குறித்து அ. ராமசாமியின் நூல் பின்வருமாறு விவரிக்கிறது: "கதரைக் கட்டிக்கொண்டு அவரக் காண வேண்டும் என்று மக்கலுக்குக் கட்டுக்கடங்காத ஆவல். தையல் கடைக்காரர்களுக்கு குல்லாய்களும் சட்டைகளும் தைப்பதில் நல்ல வேலை கிடைத்தது. கதர் வேட்டிகளும் நிறைய விற்பனையாயின. அநேகர் கதரிலேயே ரவிக்கை தைத்துக்கொண்டார்கள். திராவிட சங்கம் சும்மாயிருக்குமா? காந்திஜியின் வரவேற்பில் திராவிட மக்கள் பங்குகொள்ள வேண்டாமென்று ஒரு சுற்றறிக்கையை வழங்கியது".
காந்தி மதுரை ரயில் நிலையத்தில் வந்து இறங்கியபோது ரயில் நிலையத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருந்தார்கள். காந்தியைக் காரில் அமரவைத்து மதுரைக் கல்லூரி மைதானத்திற்கு அழைத்துச் சென்றார்கள். வழியெல்லாம் கூட்டம் இருந்தது. பொதுக் கூட்டத்தில் கிட்டத்தட்ட ஐம்பதாயிரத்திற்கும் மேல் மக்கள் கூடியிருந்தார்கள். கூட்டத்தினர் போட்ட சத்தத்தில் காந்தி பேசியது கேட்கவேயில்லை. இந்தக் கூட்டத்தில்தான் காமராஜர் முதன் முதலாகக் காந்தியைப் பார்த்திருக்கிறார்.
கூட்டத்தினர் போட்ட சத்தம் காந்தியை மிகவும் புண்படுத்தியிருக்க வேண்டும். பேச்சை மிகச் சுருக்கமாக முடித்துக்கொண்டார். அந்தச் சுருக்கமான பேச்சும் கூட்டத்தினர் போட்ட சத்தம் பற்றித்தான். இந்தக் கூட்டத்திற்குப் பிறகு மதுரை மேலமாசி வீதியில் உள்ள ராம்ஜி கல்யாண்ஜி என்பவரது வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடாகியிருந்தது.
வரலாற்றுச் சிறப்புமிக்க தினம்
இதற்கு அடுத்த நாள், அதாவது 1921 செப்டம்பர் 22ஆம் தேதிதான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த நடவடிக்கையை காந்தி மேற்கொண்டார். சட்டையில்லாமல் அரையாடை புனைந்து அவர் பொது நடவடிக்கைகளுக்கு வந்தது இன்றுதான். சட்டையில்லாது இடுப்பில் ஒரு துணி மட்டும் அணிந்துகொண்டுதான் பின்னால் அவர், வைசிராய்களையும் பேரரரசர்களையும் சர்வாதிகாரிகளையும் சந்தித்துப் பேசினார்.
செப்டம்பர் 22ஆம் தேதி காலையில் எழுந்து புறப்படும்போது, தன் அருகில் இருந்த விருதுநகர் பழனிக்குமாரு பிள்ளை என்ற தேசியத் தொண்டரை வேட்டியைப் பிடிக்கச் சொல்லி மடித்துக் கட்டினார். சட்டை அணியாமல் அந்த வேட்டியுடன் மட்டும் காந்தி பொட்டலில் நடந்த கூட்டத்திற்குச் சென்றார்.
காந்தி தனது ஆடையைக் குறைத்துக்கொண்டவுடன் பொதுமக்கள் வியப்புடன் மகாத்மாவை உற்று நோக்கினார்கள். ராஜாஜி, டாக்டர் ராஜன் போன்று காந்தியுடன் சென்ற தலைவர்கள், பொதுமக்கள் இது குறித்து என்ன நினைக்கிறார்கள் என்று உன்னிப்பாக கவனித்தார்கள்.
முதல் நாள் காந்தியை தலைப்பாகை, அங்கவஸ்திரத்துடன் பார்த்தவர்கள், மறுநாள் வெறும் இடுப்பு வேட்டியுடன் பார்த்தபோது மிகவும் வியப்படைந்தனர். இந்தக் கூட்டங்களுக்கு டி.ஆர். பத்மநாப ஐயர், கிருஷ்ண குந்து ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
அங்கு கூடியிருந்த நெசவுத் தொழில் செய்யும் மக்களிடம் (சௌராஷ்டிர மக்கள்) குடிப்பழக்கம் இருப்பதை அறிந்த காந்தி, அவற்றை விட்டுவிட வேண்டுமென அறிவுரை கூறினார். இந்தக் கூட்டத்திற்குப் பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டு மேலூர், திருப்பத்தூருக்குப் சென்றார்.
காந்தியின் இந்தச் செயலை அந்தக் காலத்தில் பத்திரிகைகள் ஒரு செய்தியாகக்கூட வெளியிடவில்லை. இந்துவும் சுதேசமித்திரனும் இது குறித்து காந்தி விடுத்த அறிக்கையை வெளியிட்டிருந்தன. இது குறித்து "என்னுடைய முழத் துண்டு" என்ற தலைப்பில் காந்தியே நவஜீவன் இதழில் விரிவாக எழுதினார்.
முதலில் இவ்வாறு சட்டையில்லாமல் வேட்டி மட்டும் கட்டிக்கொள்வதை ஒரு தற்காலிக நடவடிக்கையாகத்தான் அவர் மேற்கொண்டிருந்தார். ஆனால், பின்னர் அதுவே நிலைத்துவிட்டது. அவர் அதனைத் திட்டமிட்டுச் செய்யவில்லை.
இந்த தகவல்கள் அ. ராமசாமி தொகுத்த 'தமிழ்நாட்டில் காந்தி' என்கிறபுத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன.
தகவல் -சக்திபிரியன்
Tags :