3,000 கிலோ ஆப்கன் ஹெராயின்  கடத்தியதாக சென்னை தம்பதி கைது

by Editor / 22-09-2021 06:46:59pm
3,000 கிலோ ஆப்கன் ஹெராயின்  கடத்தியதாக சென்னை தம்பதி கைது



 குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் 3,000 கிலோ எடையுள்ள சுமார் 15,000 கோடி மதிப்பிலான ஆப்கன் ஹெராயின் போதைப்பொருள் கடத்தி வரப்பட்ட விவகாரத்தில் சென்னை தம்பதியை வருவாய் புலனாய்வுத்துறை மற்றும் தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


இரானின் பண்டார் அப்பாஸ் துறைமுகத்தில் இருந்து குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்கு வந்த மொத்தம் 40 டன் எடையுள்ள கன்டெய்னர்களை வழக்கமான சோதனை நடைமுறைகளின்படி போதைப்பொருள் பரிசோதனைக்ககு அதிகாரிகள் உட்படுத்தினர்.


அந்த கன்டெய்னர்களில் ஆப்கானிஸ்தானில் தயாரிக்கப்பட்ட பகுதியளவு சோப்புக்கல் இருப்பதாக ஆவணங்கள் கூறின. அந்த சரக்குகளின் எடை ஆயிரக்கணக்கில் இருப்பதால் அவற்றின் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அதன் தயாரிப்பு உள்ளடக்கம் குறித்து மேலதிக பரிசோதனைக்கு நடவடிக்கை எடுத்தனர். அந்த கற்கள் இடம்பெற்ற கன்டெய்னர்கள், குஜராத் காந்தி நகரில் உள்ள தடயவியல் பரிசோதனை கூடத்தில் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.


அதில் ஒரு கன்டெய்னரில் 1999.579 கிலோ எடையுள்ள ஹெராயின், இரண்டாவது கன்டெய்னரில் 988.64 கிலோ எடையுள்ள ஹெராயின் என மொத்தம் 2,988.219 எடையுள்ள ஹெராயின் போதைப்பொருள் மறைக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த போதை பவுடர்கள், ஆப்கானிஸ்தானில் விளைவிக்கப்பட்ட போதைச்செடிகளில் இருந்து தயாரிக்கப்பட்டவை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.


அவற்றின் சர்வதே மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் 15 ஆயிரம் கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறிய அதிகாரிகள், தேசிய போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின்படி அந்த சரக்குகளை பறிமுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து ஆமதாபாத், டெல்லி, சென்னை, காந்திதாம், மாண்டவி உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


ஹெராயின் போதைப்பவுடர்கள் சோப்புக்கற்களுக்குள் மறைந்து வைக்கப்பட்டிருப்பதையும் அவை இடம்பெற்ற கன்டெய்னர்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்தது விஜயவாடாவைச் சேர்ந்த நிறுவனம் என்றும் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. அந்த கன்டெய்னர்கள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படுவதற்காக இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது..இந்த நிலையில், விஜயவாடா நிறுவனம் பதிவு செய்யப்பட்ட முகவரியில் ஒரு பழைய வீடு மட்டுமே இருந்ததாகவும் அந்த நிறுவனம், அந்த வீட்டில் வசித்த பெண்மணியின் மகள் வைஷாலி பெயரில் இருந்ததும் தெரிய வந்தது. இந்த வைஷாலி மச்சாவரம் சுதாகர் என்ற சென்னை குடியிருப்புவாசியை திருமணம் செய்து கொண்டு அங்கேயே வாழ்ந்து வருபவர்.


இதை அறிந்து அவர்களின் சென்னை வீட்டுக்குச் சென்ற வருவாய் புலனாய்வுத்துறையினர் வைஷாலி, சுதாகர் இருவரையும் விசாரணைக்காக குஜராத் அழைத்துச் சென்றனர். பிறகு அவர்களை கைது செய்த அதிகாரிகள்,திங்கட்கிழமை குஜராத்தின் புஜ் நகரில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.அவர்களை பத்து நாட்களுக்கு காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிபதி சி.எம். பவார் அனுமதி அளித்துள்ளார்.அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகத்தில் ஹெராயின் பிடிபட்டுள்ளதால், காங்கிரஸ் நிர்வாகிகள் ட்விட்டரில் மோடி அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

 

Tags :

Share via