ரவுடிகள், சமூக விரோதிகளை ஒழிக்க புதிய சட்டம்

by Editor / 28-09-2021 04:31:50pm
ரவுடிகள், சமூக விரோதிகளை ஒழிக்க புதிய சட்டம்




ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் இயற்றப்படும் என்ற தமிழ்நாடு அரசின் முடிவுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. சென்னை அயனாவரத்தில் 2 ரவுடி கும்பல்களுக்கு இடையில் நடந்த மோதலில் ஜோசப் என்ற ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்டார். 


இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு இருந்த வேலு என்பவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து கைதி வேலு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாட்டில் எத்தனை ரவுடி கும்பல் உள்ளது உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பி இருந்தனர். அத்துடன் ரவுடிகள், அரசியல்வாதிகள் என எல்லோரிடமும் சட்டவிரோத ஆயுதங்கள் இருப்பதாகவும் ரவுடிகளால் போலீசார் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் நீதிபதிகள் கவலை தெரிவித்திருந்தனர்.


மேலும் மராட்டியம், கர்நாடகாவை போல் ஏன் ரவுடிகளை கட்டுப்படுத்த ஏன் புதிய சட்டம் கொண்டு வரக் கூடாது எனவும் கேள்வி எழுப்பி இருந்தனர். இதையடுத்து, ரவுடிகளையும் சமூக விரோதிகளையும் ஒழிக்க தனியாக புதிய சட்டம் முன்வடிவு தயாரிக்கப்பட்டு உள்துறை கூடுதல் செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டு இருப்பதாக தமிழக டிஜிபி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அப்போது இந்த சட்ட முன்வடிவு எப்போது சட்டமாக இயற்றப்படும் என்பது குறித்து பதிலளிக்க தமிழக உள்துறை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.


இந்நிலையில் மேற்கண்ட வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது  “திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்பு சட்டம்” என்ற பெயரில் வரைவு மசோதா தயாராக உள்ளதாகவும் அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இந்த மசோதா சட்டமாக இயற்றப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்பு சட்ட வரைவு மசோதா தயாராக இருப்பதாக தமிழக அரசு தெரிவித்ததற்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், இது சட்டமாக இயற்றப்பட்டால் ரவுடிகளை கட்டுப்படுத்த காவல்துறையினருக்கு உதவியாக இருக்கும் என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

 

Tags :

Share via