தீவிரவாதிகளை மத்திய அரசு கூண்டோடு ஒழிக்க வேண்டும்.-.-டாக்டர் க. கிருஷ்ணசாமி.

by Editor / 22-04-2025 11:47:27pm
தீவிரவாதிகளை மத்திய அரசு கூண்டோடு ஒழிக்க வேண்டும்.-.-டாக்டர் க. கிருஷ்ணசாமி.


காஷ்மீர் பகல்காம் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் - 25 பேர் உயிரிழந்துள்ளனர்.தீவிரவாதிகளை மத்திய அரசு கூண்டோடு ஒழிக்க வேண்டும்.என புதியதமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

காஷ்மீர் மாநிலம், பகல்காம் பகுதியிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் மலையின் உச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற புல்வெளி உலக அளவில் போற்றப்படும் சுற்றுலாத்தலமான சுவிட்சர்லாந்துக்கு ஒப்பானது ஆகும். கோடை விடுமுறை என்பதால் இந்திய நாடெங்கெங்கிலும் இருந்து காஷ்மீர் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் திரளாகச் செல்கின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25-க்கும் மேற்பட்ட நிராயுதபாணிகளான சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்து உள்ளதாகவும்; எண்ணற்றோர் காயமற்றுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. சுற்றுலாப் பயணிகளைச் சுற்றி வளைத்து ஆடவர் ஆடைகளை அகற்றி, இந்து என அடையாளம் கண்ட பின்னரே கொன்று இருக்கிறார்கள். இது கொடூரத்தின் உச்சக்கட்டம்; மனிதநேயமற்ற செயல்; முழுக்க முழுக்க மத ரீதியான தாக்குதல். தீவிரவாதிகளின் இந்தக் கொடுஞ்செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.  தாக்குதலில் உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பகல்காம் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய அனைத்துத் தீவிரவாதிகளும் அடியோடு ஒழிக்கப்படவும், அவர்களுக்கு பின்புலமாக இருக்கும் அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.என  அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

Tags : தீவிரவாதிகளை மத்திய அரசு கூண்டோடு ஒழிக்க வேண்டும்.-.-டாக்டர் க. கிருஷ்ணசாமி.

Share via