கனடாவில் வெயிலால் தீப்பற்றி எரிந்த மரங்கள்

by Editor / 02-07-2021 05:44:16pm
கனடாவில் வெயிலால் தீப்பற்றி எரிந்த மரங்கள்



கனடாவில் கொளுத்தும் வெயிலால் லிட்டன் நகர்ப்பகுதியில் உள்ள மரங்கள் தீ பற்றி எரிந்ததைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
கனடாவின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பநிலையால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். வெப்பநிலை உயர்வால் கரோனா தடுப்பூசி மையங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கனடாவின் மத்திய கொலம்பியா மாகாணத்தில் உள்ள லிட்டன் நகர்ப்பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலால் அப்பகுதியில் உள்ள மரங்கள் தீப்பிடித்து எரிந்தன. முன்னதாக கடும்குளிர் பகுதியாக அறியப்பட்டு வந்த லிட்டனின் வெப்பநிலை செவ்வாய்க்கிழமை 49.6 டிகிரி செல்சியஸ் (121.28 டிகிரி பாரன்ஹீட்) ஆகப் பதிவானது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் 1000த்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.இந்த தீ விபத்தால் 60 வயது தம்பதி பலியாகினர். மேலும் பல குடியிருப்புகள் தீக்கிரையாகின. கடந்த 5 நாள்களில் மட்டும் மத்திய கொலம்பியா பகுதியில் வெப்பநிலை உயர்வு மற்றும் அதன்காரணமாக ஏற்பட்ட விபத்துகளால் 486 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 

 

Tags :

Share via