சென்னையில் ஆண், பெண் மது விருந்துடன் சொகுசு விடுதி நடத்தி வந்த நடிகை மீது வழக்கு
சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் ராதாகிருஷ்ணா அவென்யூ எல்.ஆர்.பார்ம் சாலையில் உள்ள சுகுனா கார்டனில் கடந்த சனிக்கிழமை இரவில் மது விருந்து நடந்துள்ளது.ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என மது போதையில் ஆண் பெண் என இளைஞர் சமுதாயங்கள் குத்தாட்டம் போட்டுக்கொண்டிருப்பதாக கானத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.கொரோனா தொற்று பரவல் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில் அனுமதியின்றி இந்த பார்ட்டியை சென்னையை சேர்ந்த கவிதாஸ்ரீ, ராமாபுரத்தை சேர்ந்த ஸ்ரீஜித்குமார் ஆகிய இருவரும் ஏற்பாடு செய்துள்ளனர்.
தகவல் அறிந்த கானத்தூர் காவல் ஆய்வாளர் வேலு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்ட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த சுகுனா கார்டனில் புகுந்து பார்ட்டி நடத்தியது யார் என கேட்டு தங்களது விசாரணையை துவங்கினர்.அப்பொழுதுதான் சினிமா நடிகை கவிதா ஸ்ரீ என்பவர் ஸ்ரீஜித்குமார் என்பவருடன் இணைந்து இரவு நேர மது பார்ட்டியை ஏற்பாடு செய்துள்ளது தெரியவந்தது.இந்த பார்ட்டியில் நடனமாட 10 பெண்களை காசு கொடுத்து கூட்டி வந்திருந்ததும், பார்ட்டியில் கலந்து கொள்ள தலைக்கு ரூபாய் 5000 வசூலித்ததும் விசாரணையில் தெரியவந்தது.பின்னர் அங்கிருந்த ஸ்ரீஜித்குமார் உள்ளிட்ட 16 பேரை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி 16 பேர் மீதும் அரசு உத்தரவை மீறியதாகவும், ஊரடங்கை மீறியதாகவும், சட்டத்திற்கு புறம்பாக பண்ணை வீட்டில் மது விருந்து நடத்தியதாக வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து கானத்தூர் கிராம நிர்வாக அதிகாரி (விஏஓ) கலைச்செல்வி அவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டதின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற விஏஓ கார்டன் வீட்டை பூட்டி சீல் வைத்தார். வழக்கு பதிவு செய்து 16 பேரையும் போலீசார் ஜாமினில் விடுவித்தனர்.
Tags :