சுசீந்திரம்அம்மன் சிலை புறப்பாடு:  துப்பாக்கி ஏந்திய போலீஸார் அணிவகுப்பு 

by Editor / 02-10-2021 05:23:05pm
சுசீந்திரம்அம்மன் சிலை புறப்பாடு:  துப்பாக்கி ஏந்திய போலீஸார் அணிவகுப்பு 

 


திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சிலை ஊர்வலம்  புறப்பட்டது. அப்போது பாரம்பரிய முறைப்படி போலீஸார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. 1840-ம் ஆண்டு முதல் சுவாதி திருநாள் மன்னர் ஆட்சியில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு நவராத்திரி விழா நிகழ்ச்சிகள் மாற்றப்பட்டது.


நவராத்திரி விழாவில் கலந்துகொள்ளும் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் சிலை யானை மீதும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சிலை, வேளிமலை முருகன் சிலை ஆகியவை பல்லக்கிலும் ஊர்வலமாக பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரத்துக்குக் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
கடந்த ஆண்டைப் போன்றே இந்த ஆண்டுக்கான சுவாமி சிலைகள் ஊர்வலம் பத்மநாபபுரம் அரண்மனையில் கரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளுடன் நாளை (அக். 03) நடைபெறுகிறது. 4 பேர் சுமந்து செல்லும் பல்லக்குகளில் சுவாமி சிலைகளைக் கொண்டு செல்ல வேண்டும் என்றும், 20 பேர் மட்டுமே பவனியில் பங்கேற்க வேண்டும் எனவும், குமரி, கேரள இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


சுவாமி சிலைகள் ஊர்வலம் நாளை பத்மநாபபரம் அரண்மனையில் இருந்து புறப்படுவதை முன்னிட்டு, இதில் பங்கேற்பதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சிலை  பத்மநாபபுரம் அரண்மனைக்கு புறப்பட்டு சென்றது.


கோயில் முன்பு முன்னுதித்த நங்கை அம்மன் சிலை கொண்டு வரப்பட்டபோது தமிழக போலீஸார் பாரம்பரிய முறைப்படி துப்பாக்கி ஏந்தி சிலைக்கு மரியாதை அளித்தனர். அதைத்தொடர்ந்து, சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலை சுற்றி வலம் வந்த முன்னுதித்த நங்கை அம்மன் சிலையுடன் கூடிய பல்லக்கு ரதவீதியை அடைந்தது. அப்போது வீதியின் இருபுறமும் நின்ற பக்தர்கள் மலர்தூவி வழிபட்டனர்.


பின்னர், முன்னுதித்த நங்கை அம்மன் சிலை கோட்டாறு, பார்வதிபுரம், சுங்கான்கடை, வில்லுக்குறி வழியாக ஊர்வலமாக வந்து மாலையில் பத்மநாபபுரம் அரண்மனையை அடைந்தது.முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பாடு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகர், மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.


நாளை காலை வேளிமலை முருகன் சிலை புறப்பட்டு, பத்மநாபபுரம் அரண்மனை வருகிறது. அதைத்தொடர்ந்து, மன்னர் மார்த்தாண்டவர்மாவின் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சிக்குப் பின்னர் திருவனந்தபரத்துக்கு சுவாமி சிலைகள் புறப்பட்டுச் செல்கின்றன. 5-ம் தேதி திருவனந்தபுரத்தை சுவாமி சிலைகள் அடைகின்றன.


சரஸ்வதி தேவி சிலை திருவனந்தபுரம் கோட்டைக்ககம் நவராத்திரி கொலு மண்டபத்திலும், வேளிமலை முருகன் சிலை ஆரியசாலை சிவன் கோயிலிலும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சிலை செந்திட்டை அம்மன் கோயிலிலும் நவராத்திரி பூஜையில் வைக்கப்படுகிறது. பூஜை முடிந்து வருகிற 17-ம் தேதி குமரி மாவட்டத்துக்கு மீண்டும் சிலைகள் பவனியாக கொண்டு வரப்படுகிறது.

 

Tags :

Share via