திரை அரங்குகளுக்கு செல்ல 2 டோஸ்  தடுப்பூசி கட்டாயம்: கேரள அரசு அறிவிப்பு

by Editor / 05-10-2021 04:08:07pm
திரை அரங்குகளுக்கு செல்ல 2 டோஸ்  தடுப்பூசி கட்டாயம்: கேரள அரசு அறிவிப்பு

அக்டோபர் 25 ந்தேதி முதல் திறக்கப்படும் திரை அரங்குகளில், 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.


கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் ஓரளவு குறைந்து கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்ட நிலையில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டு 50 சதவிகிதப் பார்வையாளர்கள் அனுமதி என்கிற நிபந்தனையுடன் படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.


அதேநேரம் கேரளாவில் கொரோனாவின் தாக்கம் தற்போதுதான் ஓரளவு குறைந்து வருவதால், அக்டோபர் 25ஆம் தேதி முதல் திரையரங்குகளைத் திறந்து கொள்ளலாம் என கேரள அரசு அறிவித்துள்ளது. மற்ற மாநிலங்களை போல 50 சதவிகிதப் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்கிற நிபந்தனையும் விதித்துள்ளது.ஆனால், கொரோனா பாதிப்பிலிருந்து தற்காத்து கொள்வதற்காக அரசாங்கம் பரிந்துரைத்தபடி இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டவர்களை மட்டுமே திரையரங்குக்குள் அனுமதிக்க வேண்டும் என்று ஒரு புதிய நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால், தியேட்டர் அதிபர்களும் தயாரிப்பாளர்களும் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


50 சதவிகிதப் பார்வையாளர்கள் அனுமதி என்பதே வழக்கமான வசூலை பாதிக்கும். கொரோனா ஊரடங்குக்கு பின் முதன்முறையாக கேரளாவில் திரையரங்குகள் திறக்கப்படுகிறது. 50 சதவிகித இருக்கைகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை ஆகுமா? பார்வையாளர்கள் வருவார்களா? என்கிற அச்சத்தில் திரையுலகினர் உள்ளனர்.


இப்படிப்பட்ட சூழ்நிலையில் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே படம் பார்க்க அனுமதி என்றால், எந்த அளவுக்கு மக்கள் படம் பார்க்க வருவார்கள். இந்த நிபந்தனையை மட்டும் தளர்த்தும்படி அரசுக்குக் கோரிக்கை வைக்க கேரள தியேட்டர் உரிமையாளர்களும், திரைப்படத் தயாரிப்பாளர்களும் முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

Tags :

Share via

More stories