கன்னியாகுமரியில் இன்று கடலில் மூழ்கி 2 சுற்றுலா பயணிகள் பலி
கர்நாடக மாநிலம் பெங்களூரு டெக்னோ பார்க் பகுதியில் தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு பணியாற்றும் மணி (வயது 30), சுரேஷ் (30), பிந்து (25) உள்பட 10 பேர் நேற்று சுற்றுலாவாக வேனில் கன்னியாகுமரி வந்தனர். இன்று பகல், கன்னியாகுமரி கோவளம் கடற்கரை பகுதியை பார்க்க புறப்பட்டனர். இதில் மணி, சுரேஷ், பிந்து ஆகிய 3 பேரும் கடலில் குளிக்க இறங்கினர். அவர்கள் ஆனந்தமாக குளித்துக்கொண்டிருந்தபோது, ராட்சத அலை வந்தது. அந்த அலையில் 3 பேரும் சிக்கினர்.இதனை பார்த்த கடலில் குளித்த மற்ற சுற்றுலா பயணிகள் கூச்சலிட்டனர். இதனை கேட்ட மீனவர்கள் மற்றும் சிலர் துணிச்சலாக செயல்பட்டு 3 பேரையும் மீட்க முயன்றனர். அவர்களால் பிந்துவை மட்டுமே மீட்க முடிந்தது. மணி மற்றும் சுரேசை கடல் அலை இழுத்துச் சென்று விட்டது. இதுபற்றி கன்னியாகுமரி கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மற்றொரு அலை 2 பேரும் கடற்கரைக்கு கொண்டு வந்து வீசியது. அவர்களை உடனடியாக மீனவர்கள் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மணி மற்றும் சுரேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிந்து, கன்னியாகுமரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Tags :