நடிகர் விஜய்சேதுபதி, மேலாளர் ஜான்சன் ஆகியோருக்கு சம்மன்.

by Editor / 14-12-2021 05:14:31pm
நடிகர் விஜய்சேதுபதி, மேலாளர் ஜான்சன் ஆகியோருக்கு சம்மன்.

பெங்களூரு விமான நிலைய சம்பவம் தொடர்பான அவதூறு வழக்கில் நடிகர் விஜய்சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரைத்துறையில் நடிகராக இருந்து வரும் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த மகா காந்தி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்வதற்காக நவம்பர் 2-ஆம் தேதி இரவு பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராத விதமாக சந்தித்ததாகவும், திரைத்துறையில் அவரின் சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்ததாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தனது வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதுடன், தன்னையும் தனது சாதியும் பற்றி தவறாக பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விமான நிலையத்திலிருந்து வெளியேறிய தன் மீது, அவரது மேலாளர் ஜான்சன் மூலமாக தாக்கியதாகவும், காதில் அறைந்ததாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் தனது செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிப்பதாக வேதனை தெரிவித்துள்ளார். உண்மை சம்பவங்கள் இவ்வாறிருக்க, மறுநாள் ஊடகங்களில் தான் தாக்கப்பட்டதாக விஜய் சேதுபதி தரப்பில் அவதூறு பரப்புவதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே திரைத்துறையில் இருக்கின்ற சக நடிகரை பாராட்ட சென்ற தன்னை தாக்கி, அதை உண்மைக்கு புறம்பாக செய்தியாக்கிய நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நடிகர் விஜய் சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் ஜனவரி 4ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo