தமிழகம் முழுவதும் மெகா தடுப்புசி முகாம் முதல்வர் பார்வையிட்டார்.

by Editor / 18-12-2021 01:18:27pm
தமிழகம் முழுவதும் மெகா தடுப்புசி முகாம் முதல்வர் பார்வையிட்டார்.

தமிழகத்தில் இன்று 50 ஆயிரம் இடங்களில் 15-வது மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இந்த முகாம்களில் போடுவதற்காக 75 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக செப்டம்பர் மாதத்தில் இருந்து, மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது. அதன் மூலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

மேலும், 100 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி என்ற இலக்கை எட்டுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது வரை 14 மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழகத்தில் நடந்துள்ளது. அதன் மூலம் 2 கோடியே 64 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் 15-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் இன்று (18-ம் தேதி) நடைபெறுகிறது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அந்தவகையில் இதுவரை தமிழகத்தில்1 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசியும், 93 லட்சம் பேர் காலக்கெடு முடிந்து 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளாமல் இருந்துவருகின்றனர். தற்போது 75 லட்சத்துக்கும் மேல் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது.

சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது. சென்னையில் இதுவரை 8 லட்சத்து 26 ஆயிரத்து 471 பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். அந்தவகையில் 87 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 63 சதவீதம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த மெகா தடுப்பூசி  முகாமினை நந்திவரம், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 
பார்வையிட்டார்.அவருடன் அமைச்சர்கள்,அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

Tags : The Chief Minister visited the mega vaccination camp throughout Tamil Nadu.

Share via