அதிக மரியாதை காரணமாக நெல்லை திமுக பிரமுகர் கொலை -11 பேர் கைது: வக்கீல் சரண்

by Editor / 01-02-2022 03:39:21pm
அதிக மரியாதை காரணமாக நெல்லை திமுக பிரமுகர் கொலை -11 பேர் கைது: வக்கீல் சரண்

நெல்லை பாளையங்கோட்டை தெற்கு பஜார் உச்சினிமாகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பொன்னுதாஸ் என்ற அபே மணி (38). இவர் 35வது வட்ட திமுக செயலாளராக இருந்துவந்தார்.இவர்  கடந்த 29ம் தேதி இரவு 11 மணிக்கு அவரது வீட்டின் அருகே சொகுசு காரில் வந்த கும்பலால்வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.திமுக வட்டச் செயலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து இவ்வழக்கில்  இவ்வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய பாளையங்கோட்டை போலீஸ் உதவி கமிஷனர் பாலச்சந்திரன், இன்ஸ்பெக்டர் திருப்பதி உள்ளிட்டோர் தலைமையில்  4 தனிப்படை அமைக்கப்பட்டு நெல்லையில் பொருத்தப்பட்டிருந்த சுமார் 30க்கும் மேற்பட்ட சிசிடிவி காமிராக்களை ஆய்வு செய்தனர்.

இதன் தொடர்பாக நடத்திய விசாரணையில் சிவகங்கை நாட்டரசன்கோட்டையை சேர்ந்த ஈஸ்வரன் (35), தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த பேச்சிமுத்து (27), அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்வரன் (28), தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் மேல்மாந்தையை சேர்ந்த கருப்பையா (26), சிவகங்கை மாவட்டம் படமாத்தூரை சேர்ந்த ஆசைமுத்து (21), விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள வெம்பக்கோட்டையை சேர்ந்த அழகுராஜ் (53) ஆகிய 6 பேர் என்பது தெரியவந்தது. 

மேலும் கொலைக்கு உதவியாக இருந்த பாளையை சேர்ந்த தேவராஜ் (29) என மொத்தம் 7 பேரை தனிப்படையினர் கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக பாளையைச் சேர்ந்த மாணிக்கம் (25), ராமு (27), வக்கீல் அருண் பிரவீனின் தந்தை முத்துசெல்வம் பிரவீன் (66), ராஜபாளையத்தைச் சேர் ந்த கருப்பசாமி (35) ஆகிய மேலும் 4 பேரையும் தனிப்படையினர் கைது செய்தனர்.

கொலைக்கான காரணம் குறித்து குற்றவாளிகள் கூறியதாவது, பாளையில் கடந்த சில ஆண்டுகளாக கொடை விழா, திருவிழாக்களில் அபே மணிக்கே முதல் மரியாதை கிடைத்து வந்தது. மேலும் திருமண வீடு, துக்க வீடுகளில் அபே மணி முதல் ஆளாக கலந்துகொண்டு அவர்களின் குடும்பத்திற்கு வேண்டிய உதவிகள் செய்து வந்தார். 

அவர் வசித்து வரும் பகுதியில் குடிநீர், சாலை, ரேஷன் கடை உள்ளிட்ட எந்த பிரச்னை என்றாலும் முதல் ஆளாக நின்று அதனை தீர்த்து வைத்தார். இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்களிடம் அவருக்கு ஆதரவு பெருகியது. மேலும் எதிர் தரப்பை சேர்ந்தவர்களை மக்கள் கண்டு கொள்வதில்லை. இதனால் எதிர் தரப்பினருக்கு அபே மணி மீது ஆத்திரம் ஏற்பட்டது.

இதனிடையே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 35வது வார்டில் அபே மணி, தனது தாயாரை நிறுத்த இருந்ததாகவும், அவருக்கு கட்சியில் இருந்த செல்வாக்கால் அந்த வார்டில் அவர் கூறும் வேட்பாளருக்கே போட்டியிட வாய்ப்பு கிடைக்க இருந்ததாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த எதிர் தரப்பினர் காழ்ப்புணர்ச்சியோடு, கூலிப்படை மூலம் கொலை செய்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
 
இவ்வழக்கில் தனிப்படையினரால் தேடப்பட்ட முக்கிய நபரான பாளையங்கோட்டை ராஜகோபாலசுவாமி கோயில் பகுதியைச் சேர்ந்த முத்துசெல்வம் மகன் வக்கீல் அருண் பிரவீன் (36) நேற்று நெல்லை மாவட்ட ஜேஎம் 4வது கோர்ட்டில் மாஜிஸ்திரேட் ஜெய்கணேஷ் முன்னிலையில் நேற்று சரண் அடைந்தார்.

கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதை அடுத்து, கொலையான திமுக செயலாளர் அபே மணியின் உடலை அவரது உறவினர்களிடம் போலீசார் நேற்று ஒப்படைத்தனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் பாளை வெள்ளக்கோயிலுள்ள இடுகாட்டில் அபே மணியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

அதிக மரியாதை காரணமாக நெல்லை திமுக பிரமுகர் கொலை -11 பேர் கைது: வக்கீல் சரண்
 

Tags : 11 arrested for killing Nellai DMK leader over high courtesy: Advocate Charan

Share via