யூ-டியூப் வீடியோவை பார்த்து வங்கி கணக்கில் ரூ.17 லட்சம் அபேஸ்
ராய்காட்டை சேர்ந்தவர் நிலேஷ் பட்ரி. இவர் வேலை தேடி கடந்த ஜனவரி மாதம் மும்பை வந்தார். காந்திவிலி மகாவீர்நகர் பகுதியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவரின் வீட்டில் வேலை பார்த்து வந்தார். வீட்டில் மூதாட்டிக்கு சொந்தமாக ஏ.டி.எம். கார்டு இருப்பதை கண்டார்.
மேலும் தனியாக வசித்து வந்ததால் ஏ.டி.எம். கார்டில் இருந்து பணத்தை அபேஸ் செய்ய திட்டம் போட்டார். இதன்படி ஏ.டி.எம். கார்டின் ரகசிய நம்பர், வங்கி கணக்கு போன்ற விவரங்களை சேகரித்தார்.
இதன்பின்னர் கார்ட்டின் ரகசிய நம்பர்களை மாற்ற யூ-டியூப் வீடியோவை பார்த்து அறிந்தார். இதன்படி வங்கிக்கு சென்று மூதாட்டியின் செல்போன், கார்டு தொலைந்து விட்டதாக கூறி தனது செல்போன் நம்பரை கொடுத்து கார்டின் ரகசிய நம்பரை பெற்று கொண்டார். பின்னர் நிலேஷ் பட்ரி சம்பவத்தன்று மூதாட்டியின் வங்கி கணக்கில் இருந்த ரூ.17 லட்சத்தை தனது வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்தார்.
நாளடைவில் சொந்த ஊரில் தொழில் செய்ய போவதாக மூதாட்டியிடம் தெரிவித்து விட்டு வேலையில் இருந்து நின்று விட்டார்.
இதன்பின்னர் மூதாட்டியின் வீட்டிற்கு அவரது மகள் வந்திருந்தார். அப்போது மூதாட்டியின் வங்கி கணக்கை சரிபார்த்த போது ரூ.17 லட்சம் பணம் அபேஸ் ஆகி இருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக நடத்திய விசாரணையில் வீட்டு வேலைக்காரர் நிலேஷ் பட்ரி தான் பணத்தை அபேஸ் செய்து தப்பி சென்றது தெரியவந்தது.
இது பற்றி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் தகசிரில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் இருந்து மூதாட்டியின் ஏ.டி.எம். கார்டில் இருந்து பணம் எடுப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேலைக்காரர் நிலேஷ் பட்ரியை பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்த ரூ.17 லட்சத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :



















