அண்டை நாடுகளில் 3.68 லட்சம் பேர் தஞ்சம்

by Admin / 28-02-2022 11:50:48am
அண்டை நாடுகளில் 3.68 லட்சம் பேர் தஞ்சம்

உக்ரைனில் கடந்த 24-ந் தேதி ரஷியா தொடுத்துள்ள போரால் அப்பாவி மக்களின் உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் உத்தரவாதம் இல்லை. 

இதனால் உள்நாட்டு மக்கள் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். வாகன வசதி இல்லாதவர்கள் கால்நடையாக நடந்து செல்கிற அவலத்தையும் வீடியோக்கள் காட்டுகின்றன.

இந்த நிலையில் உக்ரைனில் இருந்து இதுவரை 3 லட்சத்து 68 ஆயிரம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளதாக ஐ.நா. அகதிகள் ஆணையர் தெரிவித்தார். 

ஒரே நாளில் இந்த எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார். 1 நாளுக்கு முன்னதாக 1.5 லட்சம் பேர் போலந்து, ருமேனியா, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் பிரிவு தெரிவித்தது.

மேலும் போலந்து-உக்ரைன் எல்லையில் 14கி.மீ. தொலைவுக்கு கார்கள் அணிவகுத்து நின்றதாக ஐ.நா. அகதிகள் ஆணையரகத்தின் செய்தி தொடர்பாளர் கிறிஸ் மெய்சர் தெரிவித்தார்.

போலந்து- உக்ரைன் எல்லையை 1 லட்சம் பேர் கடந்த 24 மணி நேரத்தில் கடந்து வந்துள்ளதாக போலந்து அரசு கூறி உள்ளது.
 

 

Tags :

Share via