ஆதார் இருந்தாலும் இல்லாவிட்டாலும்  தடுப்பூசி கட்டாயம்  - மத்திய அரசு உத்தரவு 

by Editor / 16-05-2021 05:14:12pm
ஆதார் இருந்தாலும் இல்லாவிட்டாலும்  தடுப்பூசி கட்டாயம்  - மத்திய அரசு உத்தரவு 


 

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை அதி தீவிரமாக இருக்கிறது. தொடர்ந்து நான்கு நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தைத் தாண்டி செல்கிறது. தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். கொரோனா வைரஸ் மருத்துவக் கட்டமைப்பை ஆட்டங்காண வைத்துள்ளது. ஆக்சிஜன், படுக்கை வசதி இல்லாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.
பரவலைக் கட்டுப்படுத்த மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். நாடு முழுவதும் மக்களிடையே தடுப்பூசி போடுவதில் தயக்கம் இருக்கிறது. அதையும் மீறி தடுப்பூசியின் அவசியம் கருதி ஒருசிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருகின்றனர். ஆனால் அவர்களிடம் அடையாள அட்டை கேட்பது, ஆன்லைனில் பதிய சொல்வது என தடுப்பூசி போட மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக ஆதார் அட்டை கொண்டுவராமல் இருந்தால் தடுப்பூசி போடுவதில்லை. இப்பிரச்சினைக் களைய மத்திய அரசின் யுஐடிஏஐ அமைப்பு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. 
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஒருவரிடம் ஆதார் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் அவருக்கு அரசின் அத்தியாவசிய சேவைகள், பலன்கள் கிடைப்பதை மறுக்கக்கூடாது. குறிப்பாக ஆதார் இல்லை என்பதற்காக ஒரு நபருக்கு தடுப்பூசி, மருந்து வழங்குதல், மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தல் ஆகியவற்றை மறுக்கக் கூடாது. ஆதார் அட்டை இல்லை என்பதற்காக ஒருவருக்கு அத்தியாவசியசேவை, மருந்து, தடுப்பூசி உள்ளிட்டவை மறுக்கப்பட்டால், அது குறித்து ஆதார் அமைப்புக்கும், குறிப்பிட்ட துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வரலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via