70 ஆண்டுகள் புகழ்பெற்ற விட்கோ நிறுவனம் மூடல்!

by Editor / 24-07-2021 07:43:51am
70 ஆண்டுகள் புகழ்பெற்ற விட்கோ நிறுவனம் மூடல்!

கொரோனாவால் வியாபாரம் முடங்கியதால் லக்கேஜ் பெட்டிகள் தயாரிப்பில் புகழ்பெற்ற விட்கோ நிறுவனம் நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1951ம் ஆண்டில் சென்னை ஜார்ஜ் டவுனில் பிளாஸ்டிக் விற்பனை நிறுவனமாக தொடங்கப்பட்டது விட்கோ நிறுவனம்.

1970ல் இருந்து முழுக்க லக்கேஜ் விற்பனையில் மட்டுமே கவனம் செலுத்தி தனிப்பெரும் நிறுவனமாக விட்கோ உருவெடுத்தது. 1990ல் தமிழகம் முழுக்க விட்கோ லக்கேஜ் ஸ்டோர்கள் தொடங்கப்பட்டன. அதை தொடர்ந்து பெங்களூரு, கொச்சி, மும்பை, டெல்லி என்று படிப்படியாக நாடு முழுவதும் தனது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தியது.

சுற்றுலா பயணிகளுக்கான லக்கேஜ் பெட்டிகள், பள்ளி மாணவர்களுக்கான பைகள் தயாரிப்பில் விட்கோ நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் தனி அடையாளத்தை பெற்றிருந்தது. இந்த நிலையில் கொரோனா காரணமாக கடந்த ஓராண்டிற்கும் மேலாக பல்வேறு நாடுகளில் விமான போக்குவரத்துகள், சுற்றுலா பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்திருக்கும் தொழில்கள் அனைத்தும் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன. இந்நிலையில் சுற்றுலா பயணங்களில் தேவைப்படும் லக்கேஜ் பெட்டிகளை தயாரிப்பதில் புகழ்பெற்று விளங்கிய தமிழ்நாட்டை சேர்ந்த விட்கோ நிறுவனம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் அசைக்க முடியாத இடத்தில் இருந்த விட்கோ நிறுவனம், கொரோனா ஊரடங்கால் வியாபாரம் முடங்கியதால் தொடர்ந்து இயங்க முடியவில்லை என்று அறிவித்துள்ளது. 70 ஆண்டுகளாக ஆதரவு அளித்த வாடிக்கையாளர்களுக்கு விட்கோ நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது. விட்கோ நிறுவனத்தின் இந்த முடிவு வாடிக்கையாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via