திருப்பதியில் அனுமன் ஜயந்தி விழா!

by Editor / 05-06-2021 07:26:25am
திருப்பதியில் அனுமன் ஜயந்தி விழா!

ஆண்டு முழுவதும் பல வைபவங்களைக் கொண்டாடும் திருமலை திருப்பதியில் தற்போது அனுமத் ஜயந்தி வைபவத்தையும் விரிவாகக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமலையில் இந்த வைபவம் இன்று (ஜூன் 4) தொடங்கி அடுத்து 5 நாள்களுக்கு நடைபெற உள்ளது.

இந்தியா முழுவதும் அனுமன் வழிபடப்படுகிறார். இந்த நிலையில் அனுமத் ஜயந்தி வைபவம் கொண்டாடும் தினங்களில் சிறு வேறுபாடு இருந்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் மார்கழி மாதம் அமாவாசையும் மூல நட்சத்திரமும் கூடிய நாளில் அனுமத் ஜயந்தி கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களைப் பொறுத்த அளவில் சித்ரா பௌர்ணமி நாளில் அனுமத் ஜயந்தி கொண்டாடப்படுகிறது. நம் அண்டை மாநிலமான தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் விரிவாகக் கொண்டாடப்படுகிறது. அதாவது சித்ரா பௌர்ணமி அன்று தொடங்கி 41 நாள்கள் இந்த விழா கொண்டாடப்பட்டு வைகாசி மாத கிருஷ்ண பட்ச தசமி அன்று நிறைவு பெறும்.

இந்த அடிப்படையில் இன்று வைகாசி கிருஷ்ண பட்ச தசமி நாள். ஆகையால் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் இன்று முதல் அடுத்த நான்கு நாள்களுக்கு உற்சவங்கள் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளன.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கூடுதல் செயலர் ஏ.வி. தர்மா ரெட்டி இதுகுறித்து அறிக்கை வெளியிட்டார்.

கடந்த மாதம் ராம நவமி அன்று அனுமனின் பிறந்த இடம் திருமலையில் இருக்கும் அஞ்சனாத்ரி என்று அலுவல்பூர்வமாக அறிவித்தது திருமலை தேவஸ்தானம். இதை ஒட்டி அனுமத் ஜயந்தியை இந்த ஆண்டு மிகச் சிறப்பாகக் கொண்டாட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அனுமனின் அவதாரத் தலமாகக் கருதப்படும் ஆகாஷ கங்கா அருகில் இருக்கும் பால ஆஞ்சநேயர் கோயிலில் இன்றுமுதல் அடுத்த ஐந்து நாள்களுக்கும் விசேஷ பூஜைகள் நடைபெற இருக்கின்றன.

இங்குள்ள அஞ்சனா தேவி மற்றும் அனுமன் விக்கிரகங்களுக்கு மல்லிகை, வெற்றிலை, கனகாம்பரம், சாமந்தி, செந்தூரம் ஆகிய கொண்டு ஆராதனைகள் செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள். மேலும் தினமும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை அனுமன் சாலிசா பாராயணத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இந்த வைபவத்தை 10 நாள்கள் கொண்டாட தேவஸ்தானம் முடிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via