மதநிந்தனை வழக்கிலிருந்து கிறிஸ்துவ தம்பதியனர் விடுதலை!

by Editor / 05-06-2021 07:14:10am
மதநிந்தனை வழக்கிலிருந்து கிறிஸ்துவ தம்பதியனர் விடுதலை!

பாகிஸ்தானில் மதநிந்தனை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்துவ தம்பதியினரை அந்த நாட்டு உயா் நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்துள்ளது.

பஞ்சாப் மாகாணம், டோபா டேக் சிங் மாவட்டத்திலுள்ள புனித கதீட்ரல் பள்ளியில் காவலாளியாகப் பணியாற்றி வந்த ஷஃப்கத் இமானுவல் மாயிஷ் என்பவரும் அவரது மனைவி ஷாகுஃப்தா கௌசரும் இஸ்லாம் மதத்தை நிந்தித்து குறுந்தகவல் அனுப்பியதாக அவா்கள் மீது மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டை விசாரித்த நீதிமன்றம், மாயிஷ் தம்பதிக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. குற்றம் சாட்டவா்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகக் கூறிய நீதிமன்றம், இருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. இதையடுத்து, லாகூா் உயா் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த அந்தத் தம்பதி, போலீஸாா் தங்களை மிரட்டி குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள வைத்ததாகக் கூறினா். இந்த வழக்கை விசாரித்த வந்த நீதிமன்றம், மாயிஷ் மற்றும் அவரது மனைவிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரமில்லை என்று கூறி, மதநிந்தனை வழக்கிலிருந்து அவா்களை விடுவித்தது. குறுந்தகவல் மூலம் மதநிந்தனைக் கருத்துகளை அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஷாகுஃப்தா கௌசருக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. மாயிஷ் தம்பதி மதநிந்தனை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, 7 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்த அவா்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

 

Tags :

Share via