கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு எதிரொலி 2 நாட்களில் தீர்வு - முதல்வர் அதிரடி

கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி புறக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இரண்டு நாட்களில் தமிழ் மொழி இடம்பெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி பதிவு செய்யும் கோவின் இணையதளத்தில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்திருந்தார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த அவர், கோவின் ஆங்கிலத்திலும் இருந்த நிலையில் புதிதாக 9 மொழிகள் இடம் பெற்றுள்ளன, ஆனால் அதில் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என கூறியிருந்தார்.அவரைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒன்றிய அரசின் கோவின் இணையதளத்தில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே இருந்த நிலையில் இன்று புதிதாக ஒன்பது மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளபோது தமிழ்வழியில் அந்த இணையதளத்தைப் பயன்படுத்திட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இந்நிலை உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும் என ஒன்றிய அரசிடம் வலியுறுத்துமாறு மக்கள் நல்வாழ்வுத்துறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். இதன்படி இந்தக் கோரிக்கையை ஒன்றிய அரசு அலுவலர்களிடம் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலர் வலியுறுத்தினார்.
அப்போது, இந்த இணைய வசதி படிப்படியாக பல்வேறு மாநில மொழிகளில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதன் அடுத்தகட்டத்தில் இரண்டு நாட்களுக்குள் தமிழ்மொழியிலும் இந்த வசதி செயல்படுத்தப்படும் என ஒன்றிய அரசின் சார்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
Tags :