கொரோனா குறித்த செய்திகளை  மிகுந்த எச்சரிக்கையுடன் வெளியிடுங்கள் 

by Editor / 30-06-2021 07:03:56pm
கொரோனா குறித்த செய்திகளை  மிகுந்த எச்சரிக்கையுடன் வெளியிடுங்கள் 

 

அரசுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை சொல்லுங்கள், அரசின் செய்திகளை முழுமையாக வெளியிடுங்கள். கொரோனா விவகாரத்தில் தமிழக அரசு எதையும் மறைக்காமல் வெளிப்படையாக உள்ளது இது உயிர்காக்கும் விஷயம் என்பதால் கொரோனா குறித்த செய்திகளை மிகுந்த எச்சரிக்கையுடன் வெளியிட வேண்டும் என ஊடகங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
செய்தி ஊடக ஆசிரியர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கொரோனா பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஊடகத்தின் பங்களிப்பு முக்கியமானது. மருத்துவ நெருக்கடியையும், நிதி நெருக்கடியை ஒருசேர எதிர் கொண்டு வருகிறோம் எனவே கொரோனாஉள்ளிட்ட செய்திகளை எச்சரிக்கையுடன் ஊடகங்கள் வெளியிட வேண்டும்.
ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது. ஆனால், ரூ.6 விலை உயர்த்தி ரூ.3 குறைக்கப்படுவதாக செய்தி பரவுகிறது. அரசின் செய்திகளை முழுமையாக வெளியிடுங்கள். தனியார் ஆம்புலன்ஸ்களில் அதிக கட்டணம் வசூல் என புகார் வரவே, கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்தது.
ஆனால் 108 ஆம்புலன்ஸுக்கு கட்டணம் என செய்தி பரவுகிறது. பிற மாவட்டங்களுக்கு பயணிக்க இ-பதிவு மட்டும் போதும் என்று அரசு அறிவித்தது. அனுமதிக்கு காத்திராமல் பதிவு செய்துவிட்டு பயணிக்கலாம். ஆனால், இபாஸ் கட்டாயம் என்று மக்கள் மத்தியில் செய்தி போகிறது. இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும்.
 அரசின் செய்திகளை முழுமையாக வெளியிடுங்கள். சந்தேகம் இருந்தால், அமைச்சர்கள், அதிகாரிகளிடம் விளக்கம்பெற்று அதையும் சேர்த்து வெளியிட வேண்டும்.பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை தமிழக செய்தித்துறை வெளியிட்டுள்ளது. அதனையும் ஊடகங்கள் வெளியிட வேண்டும்.
தொலைக்காட்சி தொடர்களில் முகக்கவசம் அணிவது போல காட்சிப்படுத்தினால், மக்களிடம் ஆழமாக பதியும். மக்களின் நல்வாழ்வில் தான் நாட்டின் எதிர்காலம் அடங்கி இருக்கிறது. கொரோனா குறித்த செய்திகள் மக்களிடம் பயத்தை ஏற்படுத்தாமல், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். அனைவரும் ஒன்றுப்பட்டு ஒரே குறிக்கோளுடன் செயல்பட்டால் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் மீண்டு வரலாம். நோய் தொற்றை அறவே குறைக்கும் முயற்சியில் அரசுடன் இணைந்து செயல்பட்டு வரும் ஊடகத்துறைக்கு நன்றி.இவ்வாறு அவர் பேசினார்.

 

Tags :

Share via