ஒன்றியம்‌ என்பது தவறான சொல்‌ அல்ல-ஓ.பன்னீர்செல்வம்‌

by Editor / 04-07-2021 06:52:07pm
ஒன்றியம்‌ என்பது தவறான சொல்‌ அல்ல-ஓ.பன்னீர்செல்வம்‌

ஓ.பன்னீர்செல்வம்‌  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

-"தேசியமும்‌, தெய்வீகமும்‌ எனது இரு கண்கள்‌" என்று கூறிய பசும்பொன்‌ முத்துராமலிங்கத்‌ தேவர்‌ திருமகனார்‌ பிறந்த தமிழ்நாட்டில்‌ தேசியத்திற்கு எதிரான செயல்கள்‌ தொடர்ந்து நடைபெற்றுக்‌ கொண்டிருப்பதைப்‌ பார்க்கும்போது, தமிழ்நாடு 'திசைமாறி' செல்கிறதோ என்ற எண்ணம்‌ பொதுமக்களிடையே மேலோங்கி நிற்கிறது.

19.7.2019 அன்று தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவையில்‌ பேசிய அப்போதைய எதிர்க்கட்சித்‌ தலைவர்‌, தற்போதைய முதலமைச்சர்‌, "வரக்கூடிய காலகட்டத்திலே தி.மு.க. ஆட்சிக்கு வரப்‌ போகிறது. அப்படி வருகிற அந்த நேரத்திலே தேர்தலிலே நாங்கள்‌ என்னென்ன உறுதிமொழிகளை, வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறோமோ அவற்றை நிச்சயமாக செய்வோம்‌. சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும்‌ செய்வோம்‌" என்று கூறினார்‌. ஒருவேளை அந்தச்‌ சொல்லாததில்‌, "ஒன்றிய அரசு" என்ற வார்த்தையும்‌, 'ஜெய்‌ ஹிந்த்‌ என்ற சொல்‌ கவர்னர் உரையில்‌ இடம்பெறாததால்‌ தமிழகம்‌ தலை நிமிர்ந்துவிட்டது' என்ற வாசகமும்‌ அடங்கியுள்ளது போலும்‌!

தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டில்‌ அமைந்ததிலிருந்து மத்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. இதற்கான காரணத்தை தமிழ்நாடு முதலமைச்சர்‌ 28.6.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவையிலே அளித்து இருப்பது விசித்திரமாக இருக்கிறது. அதிலே, இந்திய அரசியலமைப்புச்‌ சட்டத்தின்‌ முதல்‌ வரி, "இந்தியா, அதாவது பாரதம்‌ மாநிலங்களைக்‌ கொண்ட ஓர்‌ ஒன்றியமாக இருக்கும்‌" என்று குறிப்பிட்டிருப்பதாக சுட்டிக்காட்டி, அதைத்தான்‌ பயன்படுத்துகிறோமே தவிர, சட்டத்தில்‌ இல்லாததை நாங்கள்‌ பயன்படுத்தவில்லை என்றும்‌, ஒன்றியம்‌ என்பது தவறான சொல்‌ அல்ல என்றும்‌, 'மாநிலங்கள்‌ ஒன்று சேர்ந்தது' என்பதுதான்‌ அதன்‌ பொருள்‌ என்றும்‌ தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால்‌, அது பொருள்‌ அல்ல. சட்டமேதை டாக்டர்‌ பாபாசாகிப்‌ பி.ஆர்‌. அம்பேத்காரால்‌ வடிவமைக்கப்பட்ட இந்திய அரசமைப்புச்‌ சட்டம்‌ பகுதி ஐந்தின்படி, யூனியன்‌ என்றால்‌ பல்வேறு அமைப்புகளை உள்ளடக்கிய இந்திய நாட்டைக்‌ குறிக்கும்‌ சொல்லே தவிர இந்திய அரசை குறிக்கும்‌ சொல்‌ அல்ல. எனவே, "Union of State" என்பதற்குப்‌ பொருள்‌ 'மாநிலங்களை உள்ளடக்கிய யூனியன்‌' என்பதுதான்‌.தமிழ்நாடு முதலமைச்சர்‌ தனது பேச்சில்‌ பேரறிஞர்‌ அண்ணா 1963 ம்‌ ஆண்டு மாநிலங்களவையில்‌ பேசியதையும்‌, ம.பொ.சி.யும்‌, மூதறிஞர்‌ இராஜாஜியும்‌ குறிப்பிட்ட சில வார்த்தைகளை சுட்டிக்காட்டி அவற்றில்‌ கூட்டாட்சி தத்துவம்‌ அடங்கியிருக்கிறது என்றும்‌, அதற்காகத்தான்‌ ஒன்றியம்‌ என்ற வார்த்தையை பயன்படுத்துகிறோம்‌ என்றும்‌ குறிப்பிட்டு இருக்கிறார்‌. கூட்டாட்சித்‌ தத்துவம்‌ குறித்து தலைவர்கள்‌ கூறிய வார்த்தைகளை வைத்து இந்திய அரசை 'ஒன்றிய அரசு' என்று குறிப்பிடுகிறோம்‌ என்பதில்‌ நியாயம்‌ இருப்பதாகத்‌ தெரியவில்லை. இந்த ஒப்பீடு பொருத்தமானதாக இல்லை.

ஒன்றிணைக்கப்பட்ட தேசம்

ஏனென்றால்‌, எந்தத்‌ தலைவரும்‌ இந்திய அரசை 'ஒன்றிய அரசு' என்று கூறவில்லை. இன்னும்‌ சொல்லப்போனால்‌, "மாநிலங்கள்‌ பிரித்து தரப்பட்டுள்ளது" என்றுதான்‌. பேரறிஞர்‌ அண்ணாவே 1963 ம்‌ ஆண்டு மாநிலங்களவையில்‌ பேசி இருக்கிறார்‌. அதாவது, மாநிலங்களை பிரித்துக்‌ கொடுப்பதற்கான அதிகாரம்‌ இந்திய அரசிடம்‌ தான்‌ இருக்கிறது என்பதை சொல்லாமல்‌ சொல்லியிருக்கிறார்‌. எனவே, 'மாநிலங்கள்‌ ஒன்று சேர்ந்தது' என்பதுதான்‌ யூனியன்‌ என்ற வார்த்தைக்கு பொருள்‌ என்ற வாதம்‌ சரியானதல்ல. மொத்தத்தில்‌, "மாநிலங்களை உள்ளடக்கிய யூனியன்‌" என்பதுதான்‌ "Union of State" என்பதற்குப்‌ பொருள்‌ என்பதையும்‌, இந்திய நாடு பிரிக்கப்பட முடியாத ஒன்றிணைக்கப்பட்ட ஒரு தேசம்‌ என்பதைத்தான்‌ "Union of State" என்ற வாசகம்‌ நமக்கு உணர்த்துகிறது என்பதையும்‌ இந்தத்‌ தருணத்தில்‌ நான்‌ தெரிவித்துக்‌ கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்‌.

அதேசமயத்தில்‌, இந்திய அரசைப்‌ பற்றிக்‌ குறிப்பிடும்போது, 'Government of India' என்றே இந்திய அரசமைப்புச்‌ சட்டத்தில்‌ சொல்லப்பட்டிருக்கிறது. எனவே, இந்திய நாட்டை ஆளும்‌ ஓர்‌ அரசைக்‌ குறிப்பிடும்போது, எந்தக்‌ கட்சி ஆட்சியில்‌ இருந்தாலும்‌, இந்திய அரசு என்று குறிப்பிடுவதுதான்‌ பொருத்தமான ஒன்றாகும்‌. ஆனால்‌, தற்போதைய தி.மு.க. அரசோ "ஒன்றிய அரசு' என்று குறிப்பிடுகிறது.தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவையில்‌ இயற்றப்பட்ட பல அரசினர்‌ தீர்மானங்களில்‌ 'இந்தியப்‌ பேரரசு' என்று மறைந்த முன்னாள்‌ முதல மைச்சர்‌ மு.கருணாநிதி குறிப்பிட்டு இருப்பதை இந்தத்‌ தருணத்தில்‌ நான்‌ நினைவூட்ட விரும்புகிறேன்‌. இந்திய அரசை 'ஒன்றிய அரசு' என்று சொல்வது நமது இந்திய தாய்த்‌ திருநாட்டை கொச்சைப்படுத்துவது போலும்‌, சிறுமைப்படுத்துவது போலும்‌ அமைந்துள்ளது என்று தமிழ்நாட்டு மக்கள்‌ நினைக்கிறார்கள்‌ என்பதை முதலமைச்சருக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்‌.

மத்திய அரசுடன்‌ இணக்கமான போக்கினைக்‌ கடைபிடித்து, தமிழ்நாட்டின்‌ உரிமைகளை, கோரிக்கைகளை ஜீவாதாரப்‌ பிரச்சனை களை, நலன்களை வென்றெடுக்க நடவடிக்கை எடுக்காமல்‌, இந்திய அரசை "ஒன்றிய அரசு' என்று கூறி சிறுமைப்படுத்துவது மக்கள்‌ நலன்‌ பயக்கும்‌ செயல்‌ அல்ல என்பதையும்‌, இதுபோன்ற செயல்‌ ஏற்றுக்கொள்ளக்‌ கூடியதல்ல என்பதையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம்‌ கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo