குமரியில் சூறைக்காற்றுடன் மழை: வீடு இடிந்து 2 வயது பெண் குழந்தை பலி -
குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் அருகே ராமன்துறை பகுதியை சேர்ந்தவர் டயானா பெக்மீர் (42). மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவருடைய மனைவி கவிதா. இவர்களுக்கு மைக்கிள் ராஜா (6), ஆரோக்கிய ரக்ஷன் (5) என்ற 2 மகன்களும், ரெஜினா என்ற 2 வயது மகளும் உள்ளனர். இவர்கள் வசிக்கும் வீடு கடற்கரையை ஒட்டி உள்ளது. மேலும் மேற்கூரை ஆஸ்பெட்டாஸ் ஷீட்டுகளால் கட்டப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு டயானா பெக்மீர் அந்த வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்தது.
இந்தநிலையில் திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 4 பேரும் காயம் அடைந்தனர். மேலும் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். படுகாயமடைந்த குழந்தை ரெஜினாவை சிகிச்ைசக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அறிந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக குழந்தையின் உடல் ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டது. இதுதொடர்பாக புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சூறைக்காற்றில் வீடு இடிந்து விழுந்து குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. குமரியில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் மரங்கள் முறிந்து விழுந்து மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் பல கிராமங்கள் இருளில் மூழ்கின. குளச்சலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
Tags :