கர்நாடகாவிலுள்ள தமிழ் கல்வெட்டுகளை  சென்னைக்கு மாற்ற  உயர்நீதிமன்றம்  உத்தரவு

by Editor / 19-08-2021 03:56:11pm
கர்நாடகாவிலுள்ள தமிழ் கல்வெட்டுகளை  சென்னைக்கு மாற்ற  உயர்நீதிமன்றம்  உத்தரவு


கர்நாடகாவிலுள்ள தமிழ் கல்வெட்டுகளை, 6 மாதங்களுக்குள் சென்னைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று இந்திய அரசுக்கு உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கீழடி, கொந்தகை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், தாமிரபரணி ஆற்றுப் படுகையில் அகழ்வாராய்ச்சியைத் தொடர்ந்து நடத்தக்கோரியும், மதுரை சமணர் படுகை உள்ளிட்ட பழங்கால அடையாளங்களைப் பாதுகாக்க கோரியும் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுமீதான விசாரணை நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு  விசாரித்தது.


கடந்த முறை இந்த மனு விசாரணைக்கு வந்தபோது கர்நாடக அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே காவிரி பிரச்சினை இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால தொன்மையான கல்வெட்டுகள், தமிழ் படிமங்கள், போன்றவை மைசூர் கல்வெட்டு தலைமையகத்தில் ஏன் வைக்கப்பட்டுள்ளன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மைசூரிலுள்ள கல்வெட்டியல் துறையை தமிழ்நாட்டிற்க்கு மாற்ற முடியாதா என்றும் கேட்டனர். இந்த கேள்விக்கு மத்திய அரசு தரப்பில் பதிலளிக்கையில், “1980ஆம் ஆண்டிலேயே தமிழ் கல்வெட்டியலுக்கான கிளை சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 2 பேரும், மைசூரில் 2 பேரும் என தமிழுக்கு நான்கு கல்வெட்டு ஆய்வாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்” என்று கூறப்பட்டது.

பின்னர் நீதிபதிகள், “நாடு முழுவதும் உள்ள 1 லட்சம் கல்வெட்டுகளில், 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ் மொழிக்கானவை என்றிருக்கையில், சென்னையில் சமஸ்கிருதத்துக்கு ஆய்வாளர்களின் தேவையென்ன? பெரும்பாலான கல்வெட்டுகள் தமிழ் மொழிக்கானவை எனும் போது அதனை திராவிட மொழி என அடையாளப்படுத்த வேண்டிய அவசியமென்ன?
ஒரு இனத்தின் தொன்மையான சமூக, பண்பாட்டு வரலாற்றை ஆய்வதற்கு கல்வெட்டுச் சான்றுகளே முக்கிய இடம் வகிக்கிறது. அரசின் கொள்கை முடிவு என்றாலும், ஒன்றின் அடையாளத்தை மறைக்கும் வகையில் இருத்தல் கூடாது” என்றனர். இச்சூழலில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மைசூரிலுள்ள தமிழ் கல்வெட்டுகள், தமிழ் வரலாற்று ஆவணங்கள் அனைத்தும் அடுத்த ஆறு மாதத்திற்குள் சென்னைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

 

Tags :

Share via