வங்கி லாக்கரை உடைக்க வங்கிகளுக்கு அதிகாரம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு 

by Editor / 19-08-2021 03:53:31pm
வங்கி லாக்கரை உடைக்க வங்கிகளுக்கு அதிகாரம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு 

வாடிக்கையாளர்கள் வாடகை கொடுக்காவிட்டால் வங்கி லாக்கரை உடைக்கலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


வங்கிகளின் லாக்கர் சேவைக்கு, ஆண்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரம் வரை கட்டணம் அல்லது வாடகை வாடிக்கையாளர்களிடமிருந்து வங்கிகளால் வசூல் செய்யப்படுகிறது. தற்போது இந்த லாக்கர்களுக்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி மாற்றியமைத்துள்ளது. அதன்படி 3 ஆண்டுகளுக்கு பராமரிப்பு கட்டணத்தை வாடிக்கையாளர்கள் செலுத்தாவிட்டால் அந்த லாக்கரை உடைக்கும் அதிகாரத்தை வங்கிகளுக்கு வழங்கியிருக்கிறது.அதாவது நீங்கள் என்ன பொருள் லாக்கரில் வைக்கிறீர்கள் என வங்கிகளுக்கு தெரியாது.

ஆனால் வங்கி மேனஜரிடமும் உங்களிடமும் தலா ஒரு சாவி இருக்கும். நீங்கள் கட்டணம் செலுத்தாத பட்சத்தில், மூன்று முறை நோட்டீஸ் வழங்கப்படும். அதற்கும் நீங்கள் பதிலளிக்கவில்லை என்றால் வங்கி உங்கள் லாக்கரை உடைக்க முடியும். இது நடக்காமல் இருக்க, லாக்கருக்கு 3 ஆண்டுகள் வைப்பு நிதியை வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் பெற்றுக் கொள்ளலாம். அதேபோல வேறு சில விதிகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இயற்கை சீற்றத்திலோ, வாடிக்கையாளரின் அலட்சியத்திலோ லாக்கருக்கு சேதம் ஏற்பட்டால் வங்கி பொறுப்பேற்காது.


வங்கியில் பணிபுரியும் ஊழியர்களால் லாக்கரிலுள்ள பொருட்கள் மூலம் மோசடி நடந்தால் ஓராண்டு வாடகையை போல 100 மடங்கு தொகையை வாடிக்கையாளருக்கு வங்கி இழப்பீடாக வழங்க வேண்டும். தீ விபத்து அல்லது வங்கி கட்டடம் இடிந்து விழுந்து லாக்கர் சேதமடைந்தாலும் அதற்கு வங்கி தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும். அதற்கான இழப்பீட்டையும் அளிக்க வேண்டும். சட்டத்திற்குப் புறம்பான பொருட்களோ அபாயகரமான சாதனங்களை வைக்கக் கூடாது என்ற விதிமுறையை, வாடிக்கையாளர் உடனான ஒப்பந்தப் பத்திரத்தில் வங்கிகள் சேர்க்க வேண்டும். வங்கியின் கவனக்குறைவால் லாக்கர் பொருட்களுக்கு ஏற்படும் சேதத்திற்கு வங்கிகள் பொறுப்பேற்க வேண்டும். இந்த திருத்தியமைக்கப்பட்ட விதிமுறைகள் அடுத்தாண்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகின்றன.

 

Tags :

Share via