நடிகர் சங்க தேர்தல் நியாயமான முறையில் நடைபெறவில்லை

by Staff / 20-03-2022 04:23:32pm
நடிகர் சங்க தேர்தல் நியாயமான முறையில் நடைபெறவில்லை

2019-ம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலின் வாக்கு எண்ணிக்கை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள குட் ஷெப்பர்ட் பள்ளியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிட்டனர்.

வாக்குகள் அனைத்தும் பதிவான நிலையில், தேர்தலை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டு, வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து நாசர் தரப்பு தொடர்ந்து மேல்முறையீட்டு மனுவில் வாக்குகளை எண்ணுவதற்கு எந்த தடையும் இல்லை என உத்தரவிடப்பட்டது.
 
அதன்படி, இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தல் அதிகாரி, நடிகர் சங்க தனி அதிகாரி மற்றும் போட்டியிட்ட வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நியாயமான முறையில் நடைபெறவில்லை என கூறி பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினர் வெளியேறியுள்ளனர். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த பாக்யராஜ், வாக்கு எண்ணிக்கையில் பல குளறுபடிகள் உள்ளதாகவும், இதற்கு சரிவர பதில் கூறாமலே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கையை தொடங்கியதாகவும் குற்றம் சாட்டினார்.


 

 

Tags :

Share via